
புதுவை சட்டப்பேரவைத் துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்திடம் தனது ராஜிநாமா கடிதத்தை வியாழக்கிழமை இரவு ஒப்படைத்த வெ.வைத்திலிங்கம்(வலது).
புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் வியாழக்கிழமை இரவு திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
புதுவை காமராஜர் நகர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட வைத்திலிங்கம், 2016 முதல் சட்டப்பேரவைத் தலைவராக இருந்து வந்தார். மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் புதுவை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்படுவார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இதையடுத்து, புதுவை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத் கடந்த வாரம் வைத்திலிங்கத்தைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனிடையே, கடந்த 2 நாள்களாக முதல்வர் வே.நாராயணசாமி, வைத்திலிங்கம், புதுவைப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் ஆகியோர் தில்லியில் முகாமிட்டிருந்தனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் புதுச்சேரிக்கு திரும்பிய வைத்திலிங்கம், புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை இரவு தனது பதவியை ராஜிநாமா செய்த அவர், பொறுப்புகளை சட்டப்பேரவைத் துணைத் தலைவர் சிவக்கொழுந்திடம் ஒப்படைத்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைமை தமிழகம், புதுவையில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இதுவரை வெளியிடவில்லை.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...