
அரசு மருத்துவமனைகளில் ரத்தம் செலுத்தப்பட்டதால் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்படுகிறது.
மருத்துவ சேவைகள் இயக்குநரும், மருத்துவக் கல்வி இயக்குநரும் இணைந்து அமைக்கவுள்ள அக்குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சுகாதாரத் துறைச் செயலரிடம் பரிந்துரைக்கப்படும். கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்படாத ரத்தத்தை செலுத்தியதால் கடந்த சில மாதங்களில் மட்டும் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகின. அதன் பேரில் ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, அச்சம்பவம் குறித்த விவரங்கள் திரட்டப்பட்டன. அக்குழுவானது, தனது அறிக்கையை சுகாதாரத் துறைச் செயலருக்கு அண்மையில் அனுப்பியது. அதன் அடிப்படையில் சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் உத்தரவு பிறப்பித்தார். அதில், அரசு மருத்துவமனைகளில் பேறு கால மரணங்கள் அலட்சியத்தின் காரணமாக நடைபெற்றிருப்பின், அதற்கு காரணமானவர்களின் மருத்துவப் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது குற்ற வழக்குப் பதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, அந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர் ருக்மணி ஆகியோர் அதற்கான குழுவை அமைப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட அக்குழுவானது வியாழக்கிழமை (மார்ச் 28) அமைக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாலியல் வன்கொடுமை: இதனிடையே, தருமபுரி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த ஒரு சிறுமியின் மருத்துவப் பதிவேட்டில் அதுதொடர்பாக எந்தத் தகவலையும் மருத்துவர்கள் குறிப்பிடாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் சம்பந்தப்பட்ட மருத்துவர்களைப் பணியிடை நீக்கம் செய்வதோடு, அவர்கள் மீது குற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை
தருமபுரி அரசு ரத்த வங்கி விவகாரம் தொடர்பாக வெளியான செய்திகளால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
இது குறித்து, தமிழக அரசு செவிலியர் சங்க மாநில பொதுச் செயலர் வளர்மதி, அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டச் செயலர் முருகன் ஆகியோர் தருமபுரியில் புதன்கிழமை அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஆண்டுக்கு ஏறக்குறைய 8 லட்சம் யூனிட் ரத்தம் நோயாளிகளுக்குச் செலுத்தப்படுகின்றன. தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளும் சர்வதேச தரத்தில் செயல்படுகின்றன. அனைத்து நிலையிலும், தீவிர சோதனைகளுக்கு உள்படுத்தப்பட்ட பிறகே நோயாளிகளுக்கு ரத்தம் செலுத்தப்படுகிறது.
கர்ப்பிணிகள் உயிரிழந்த சம்பவத்தில் முழுமையான விசாரணைக்கு முன்னதாகவே, எங்கள் மீது நடவடிக்கை கோருவது வருத்தமளிக்கிறது. இந்த விவகாரத்தில், முழுமையான விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
அவ்வாறு நடத்தும் விசாரணையில் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மீது தவறு இருப்பது கண்டறியப்பட்டால், கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எங்கள் சங்கமும் துணை நிற்கும்.ரத்தம் செலுத்துவதால் உயிரிழப்பு எனக் கூறுவதால், மக்களிடையே தேவையற்ற சந்தேகமும், அச்சமும் ஏற்படும். எனவே, இந்த விவகாரத்தில் ரத்த வல்லுநர்கள் கொண்ட குழு அமைத்து முமுமையான விசாரணை நடத்த வேண்டும். மேலும், பொதுமக்களும், நோயாளிகளும் அச்சமடையத் தேவையில்லை என்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...