
அரசு மருத்துவமனைகளில் தகுதியற்ற ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிகள் மரணமடைந்த விவகாரத்தில், 2 வாரங்களுக்குள் பதிலளிக்க சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் உள்பட 4 பேருக்கு மாநில மனித உரிமை ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தருமபுரி, ஒசூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கியில், மூத்த அரசு மருத்துவர்கள் மற்றும் சில அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கடந்த ஜனவரி வரையிலான 4 மாதங்களில், கெட்டுப்போன ரத்தம் ஏற்றியதால் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து மருத்துவ அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கர்ப்பிணிகளுக்கு ஏற்றப்பட்ட அந்த தகுதியற்ற ரத்தம், பாதுகாப்பானது என மருத்துவர்கள் சான்று வழங்கியிருப்பது தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவதுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டார் என்ற செய்தி கடந்த புதன்கிழமை நாளிதழில் வெளியானது.
இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், தானாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தார்.
மேலும் இதுகுறித்து 2 வாரத்துக்குள் விளக்கமளிக்க சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர், கிராமப்புற சுகாதார சேவை இயக்குநர், தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட இயக்குநர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...