
தமிழகத்தில் மதுபோதையால் நடைபெறும் குற்றங்களுக்கு, மதுபானத்தை விற்பனைச் செய்யும் தமிழக அரசை ஏன் பொறுப்பாளியாக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மதுபோதையில் நடந்த தகராறில் 2 பேரை தற்கொலைக்குத் தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி கோவையைச் சேர்ந்த வேலுசாமி, சசிகுமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், தமிழகத்தின் ஒட்டுமொத்த மது விற்பனையையும் தமிழக அரசே மேற்கொண்டு வருகிறது. தனது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதன் மூலம் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.31 ஆயிரத்து 757 கோடி வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தின் மொத்த வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு வருமானம் மதுவிற்பனை மூலம் கிடைப்பது துரதிர்ஷ்டவசமானது.
தேசிய சுகாதாரத் துறை ஆய்வின்படி 47 சதவீத ஆண்கள் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். மதுபோதையின் காரணமாகத் தான் விபத்துகள், சட்டம், ஒழுங்குப் பிரச்னை, கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
மதுபான விற்பனைக் கொள்கையில் தமிழக அரசு மாற்றங்களைக் கொண்டு வராத பட்சத்தில், இந்தக் குற்றங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். பொதுவாக குற்ற வழக்குகளில் குற்றம் செய்தவர்களை விட அந்த குற்றத்தைச் செய்யத் தூண்டியவர்களுக்குத் தான் அதிகமான தண்டனை வழங்கப்படும்.
எனவே, தமிழகத்தில் மதுபோதையால் நடக்கும் அனைத்துக் குற்றங்களுக்கும் அந்த மதுபானத்தை விற்பனை செய்யும் தமிழக அரசை ஏன் பொறுப்பாளியாக்கக் கூடாது? அப்போது தான் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, நீதி உள்ளிட்டவை விரைவாக கிடைக்கும். மதுவினால் அதிகரித்து வரும் குற்றங்களை நீதிமன்றம் ஒருபோதும் கண்மூடி வேடிக்கைப் பார்க்காது. மதுவினால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய இந்தப் பிரச்னையில் இருந்து அரசு நழுவுவதை நீதிமன்றம் அனுமதிக்காது. எனவே இந்த வழக்கில் சரியான தீர்ப்பை பிறப்பிக்க அனைத்து வழக்குரைஞர்கள் சங்கங்களும் நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும்.
எனவே இதுதொடர்பாக தமிழக அரசு வரும் ஏப்ரல் 4-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...