
திருவாரூர் - பட்டுக்கோட்டை இடையே அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளிக்கிழமை அதிவேக ரயில் சோதனை ஓட்ட ஆய்வை தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் மேற்கொண்டார்.
காரைக்குடி- விழுப்புரம் இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதைகள் அகல ரயில் பாதைகளாக மாற்ற, கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் பணிகள் தொடங்கின. இதையொட்டி, இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து படிப்படியாக குறைக்கப்பட்டது. இறுதியாக 2012-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி திருவாரூர் - பட்டுக்கோட்டை இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, அகல ரயில் பாதைப் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தன. சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடி - பட்டுக்கோட்டை வரை பணிகள் நிறைவடைந்து, இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே பணிகள் நிறைவடைந்ததையொட்டி, சில நாள்களாக ட்ராலி மூலம் ஆய்வுகள் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலையில் பட்டுக்கோட்டையிலிருந்து 10.20 மணிக்குப் புறப்பட்ட ரயில், 75 கிலோ மீட்டர் தூரத்தை மணிக்கு 84 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து முற்பகல் 11.25 மணிக்கு திருவாரூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.
இந்த சோதனை ஓட்டம் தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ரயில்வே கேட் பழுது: இந்த அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றபோது, புலிவலம் அருகில் வேளங்குடியில் அமைக்கப்பட்டிருந்த ரயில்வே கேட் பழுதானது. இதனால், ரயில்வே ஊழியர்கள், இந்த கேட்டை தாங்களாகவே அழுத்திப் பிடித்தவாறு, திறக்கவும், மூடவும் செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...