
காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்த வந்ததால் திமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட காட்பாடி பேரவை காந்தி நகர் பகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன், அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருமான டி.எம். கதிர் ஆனந்தன் வீடு உள்ளது.
இந்நிலையில் வருமான வரித் துறை துணை ஆணையர் தீபன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர் குழுவினர் துரைமுருகன், கதிர் ஆனந்தன் தங்கியுள்ள வீட்டில் சோதனை நடத்துவதற்காக வெள்ளிக்கிழமை இரவு வந்தனர். இதையறிந்த திமுகவினர் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து திமுக வழக்குரைஞர்கள் அங்கு வந்து அதிகாரிகளிடம் சோதனைக்கான ஆணை குறித்து கேட்டனர். அதற்கு வேலூர் தொகுதி தேர்தல் செலவினப் பார்வையாளர் உத்தரவின் பேரில் சோதனை நடத்த வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் தொகுதி வேட்பாளர் அரக்கோணம் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் இருப்பதால் சோதனை நடத்தக் கூடாது என திமுக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் உள்ள எந்தப் பகுதியிலும் சோதனை நடத்த அனுமதி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், துரைமுருகன் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் கடிதம் ஒன்றை அளித்தார். அதில், தான் நோயாளி என்பதால் காலையில் சோதனை நடத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனால் அதிகாரிகள் வீட்டு வளாகத்திலேயே இருந்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...