
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்றோர்.
தொழிலாளர் தினத்தையொட்டி, தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மே தின பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
திமுக தொழிற்சங்க பேரவை சார்பில், தூத்துக்குடி டூவிபுரம் 5 ஆவது தெரு சந்திப்பில் தொடங்கிய இப்பேரணியில், திமுக தொழிற்சங்க பேரவைத் தலைவர் சண்முகம், மாநில மகளிரணிச் செயலர் கனிமொழி எம்.பி., ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கே.என். நேரு எம்எல்ஏ, மாவட்டப் பொறுப்பாளர்களும், எம்எல்ஏக்களுமான கீதாஜீவன் (வடக்கு) அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் (தெற்கு), எம்எல்ஏக்கள் மா. சுப்பிரமணியன், மகேஷ் அன்பில் பொய்யாமொழி, பூங்கோதை ஆலடி அருணா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பேரணி சிதம்பரநகரில் நிறைவடைந்ததும், அங்கு அமைக்கப்பட்டிருந்த மே தின நினைவுத் தூணுக்கு மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்கு நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
மே தினத்தை கொண்டாடுவதற்கு எல்லா வகையான உரிமைகளையும் பெற்ற கட்சி திமுக. இந்த நாட்டின் காவலாளியாகவும், ஒட்டுமொத்த தொழிலாளர்களின் காவலாளியாகவும் திமுக இருந்து வருகிறது.
மே 1 ஆம் தேதியை ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறையாக மாற்றியவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி.
45 கோடி தொழிலாளர்களின் உரிமையை சில பன்னாட்டு நிறுவனங்களிடம் பிரதமர் மோடி அடகு வைத்துவிட்டார். மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கக்கூடிய அரசுகள் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கிய நிகழ்வுகளை மறந்துவிடக் கூடாது. நாட்டுக்கும், தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் மே 23 ஆம் தேதிக்குப் பிறகு விடிவுகாலம் பிறக்கும் என்றார் அவர்.
தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அத்திமரப்பட்டி, காலாங்கரை உள்ளிட்ட கிராமங்களில் வீடு வீடாகச் சென்று திமுக வேட்பாளர் எம்.சி. சண்முகையாவுக்கு, மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். மேலும், அங்குள்ள வீடுகளின் திண்ணைகளில் அமர்ந்து பொதுமக்களிடம் அவர் குறைகளைக் கேட்டறிந்தார். அனைத்து கோரிக்கைகளும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என அவர் உறுதியளித்தார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...