
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி சட்டப் பேரவை தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வருகிறார். இதையடுத்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டுக்குச் செல்கிறார். அங்கு மதிய உணவை முடித்துவிட்டு, பகல் 2 மணிக்கு மேல் கார் மூலம் அரவக்குறிச்சி செல்கிறார்.
அங்கு அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு சேலம் விமான நிலையம், நெடுஞ்சாலை நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.