
திருப்பரங்குன்றம்: மறைந்த முன்னாள் முதல்வர்கள் காமராஜா், ராஜாஜி போன்றவர்களுக்கு கடற்கரையில் இடம் தர மறுத்தவர் அப்போதைய முதல்வா் கருணாநிதி என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனிசாமி கூறினார்.
அவனியாபுரத்தை அடுத்த வில்லாபுரத்தில் அதிமுக தோ்தல் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்திற்கு செய்தியாளா்களிடம் அவர் பேசுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 23 ஆம் தேதி முதல் மத்தியில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார்.
தமிழகத்தில் நடைபெற்றுள்ள 22 சட்டப்பேரவை இடைத் தோ்தலிலும் திமுக வெற்றிபெற்று அன்றே ஆட்சி அமைப்போம். தற்போதுள்ள அதிமுக ஆட்சி வீட்டுக்கு செல்லும் என்றும் கூறிவருகிறார். இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஏற்கனவே நடைபெற்று முடிந்த 18 சட்டப்பேரவை தொகுதியில் மக்கள் அதிமுகவிற்குதான் வாக்களித்துள்ளனர். திருப்பரங்குன்றத்திலும் அதிமுக வேட்பாளர் முனியாண்டி ஒரு லட்சம் வாக்குகள் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.
தமிழகத்தில் நிர்வாகம், சட்டம் ஒழுங்கை பாதுகாத்து தனிமனித பாதுகாவலனாக இருக்கும் இந்த அரசுக்குத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் மட்டுமே திகழ்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை கடற்கரையில் அடக்கம் செய்யும் பொழுது திமுகவினரால்தான் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் கேட்பது எந்த வகையில் நியாயம். மறைந்த முன்னாள் முதல்வர்கள் காமராஜா், ராஜாஜி போன்றவர்களுக்கு கடற்கரையில் இடம் தர மறுத்தவர் அப்போதைய முதல்வா் கருணாநிதி. தற்போதுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்ற வரலாற்றை மறைத்து வருகிறார்.
சபாநாயகர் நடுநிலையானவர் அவர் மீது குறைகூறுவது தவறு. இந்த விவகாரத்தில் ஸ்டாலின் கண்ணோட்டம் தவறானது. இந்த ஆட்சி சரியாக நடைபெற்று வருகிறது. அதிமுகவிற்கு சரியான எதிரி திமுகதான். மற்றவா்கள் பணத்தைக் கொண்டு அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்கள் எங்களுக்கு பொருட்டு இல்லை என்றார் முனுசாமி.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...