
தேசிய ரேங்கிங் மற்றும் "நாக்' புள்ளிகளை வாங்கிய பின்னர், சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், பொறியியல் கல்லூரிகளும் ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதில், விருதுநகரில் உள்ள ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒரே நேரத்தில் அங்கு பணிபுரியும் 75 உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
உயர் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக "நாக்' (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகளை கல்லூரிகள் பெற வேண்டும் எனக் கொண்டு வரப்பட்டது. பின்னர் அது கட்டாயமாக்கப்பட்டது. தொடர்ந்து, உயர் கல்வி நிறுவனங்களிடையே தரத்தில் போட்டியை உருவாக்கும் தேசிய அளவிலான ரேங்கிங் (என்.ஐ.ஆர்.எப்) முறை அறிமுகம் செய்யப்பட்டது.
இவை அனைத்தும் ஒரு கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர் வேலைவாய்ப்புத் திறன், ஆராய்ச்சி மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், ஆராய்ச்சிக் கட்டுரை வெளியீடு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலேயே தரவரிசையும், நாக் புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. எனவே, இந்த உள்கட்டமைப்பு வசதிகளை கல்லூரிகள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும், இந்தக் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை வழங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இதில் பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகக் குழுவும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்) குழுவும் இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும்.
இந்த நிலையில், தமிழகத்திலுள்ள பல பொறியியல் கல்லூரிகளும், சில நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும் இதுபோன்ற ஆய்வுகள் மற்றும் என்.ஐ.ஆர்.எப். ரேங்கிங், நாக் புள்ளிகள் பெறுவதற்கான நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது.
அதுபோல, சென்னையில் உள்ள சில பொறியியல் கல்லூரிகளும் ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், சில பொறியியல் கல்லூரிகளில் தகுதியற்ற பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர் சங்க நிர்வாகி கார்த்திக் கூறியது:
பொறியியல் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
இதுதொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அதாவது, ஏஐசிடிஇ, அண்ணா பல்கலைக்கழக ஆய்வின்போது மட்டும் தகுதியான பேராசிரியர்களை இந்தக் கல்லூரிகள் பணியமர்த்தும்.
பின்னர் இந்த ஆய்வு முடிந்ததும் அல்லது என்.ஐ.ஆர்.எப். ரேங்கிங், நாக் புள்ளிகள் பெற்றதும் இந்தப் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு, தகுதியில்லாத பேராசிரியர்களை குறைந்த ஊதியத்தில் நியமித்துவிடுவர். இதன் காரணமாகவே தமிழகத்தில் பொறியியல் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், இந்த ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒரே நேரத்தில் 75 பேராசிரியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது. மேலும் சிலரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோல, சில பொறியியல் கல்லூரிகளும், மாணவர் சேர்க்கை குறைந்து வருவதன் காரணமாக ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் சில பொறியியல் கல்லூரிகள் குறைந்த ஊதியம் தருவதற்காக தகுதியில்லாத பேராசிரியர்களை நியமித்து வருகின்றன.
குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டுவில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் வேதியியல் துறையில் முதுநிலை உயரி வேதியியல் பட்டம் பெற்றவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபோல பல பொறியியல் கல்லூரிகளில் தகுதியில்லாத பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், இதில் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுப்பதில்லை என்றார் அவர்.
புகார் அளித்தால் நடவடிக்கை: இதுகுறித்து ஏஐசிடிஇ தலைவர் சகஸ்ரபுத்தே தொலைபேசி மூலம் அளித்த பேட்டி:
பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பப் படிப்புகளை வழங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் பொதுவான ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஏஐசிடிஇ தலையிட முடியாது.
அதே நேரம், ஏஐசிடிஇ நிர்ணயித்துள்ள மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரத்துக்கு குறைவாகவோ அல்லது "நாக்' அங்கீகாரம், ரேங்கிங் நடைமுறைகளுக்குப் பிறகு இதுபோன்ற ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதுகுறித்து ஏஐசிடிஇ-யிடம் புகார் அளிக்கலாம்.
பாதிக்கப்படும் பேராசிரியர்கள் தங்களுடைய முழு விவரங்களுடன் ஸ்ரீர்ம்ல்ப்ஹண்ய்ற்ஃஹண்ஸ்ரீற்ங்-ண்ய்க்ண்ஹ.ர்ழ்ஞ் என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது ஏஐசிடிஇ, நெல்சன் மண்டேலா மார்க், வசந்த் குஞ்ச், புதுதில்லி - 110070 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ புகார் அளிக்கலாம். அதனடிப்படையில், ஏஐசிடிஇ குழு நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
2 மாணவர்களைச் சேர்க்காவிட்டால் 20 சதவீத ஊதியம் "கட்'
தமிழகத்தில் பெரும்பாலான இரண்டாம் நிலை பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களுக்கு, குறைந்தபட்சம் இரு மாணவர்களை படிப்பில் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனை விதிப்பது தொடர்கதையாகி வருகிறது.
இந்த ஆண்டும், சில பொறியியல் கல்லூரிகள் இதுபோன்ற நிபந்தனைகளை பேராசிரியர்களுக்கு விதிப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் பொறியியல் கல்லூரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.
இந்தக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நிலையில் இருப்பவர்கள், பள்ளிகள், அவர்களின் பக்கத்து வீடுகளுக்குச் சென்று கல்லூரி பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும் என்பதோடு, குறைந்தபட்சம் 2 மாணவர்களை சேர்க்க வேண்டும்.
அவ்வாறு சேர்க்க இயலாத உதவிப் பேராசிரியர்களுக்கு ஊதியத்தில் 20 சதவீதம் குறைக்கப்பட்டுவிடும். இதுதொடர்பாக புகார் அளித்தும் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுப்பதில்லை என அந்தக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறியது: தனியார் கல்லூரி பேராசிரியர்கள், இதுதொடர்பான புகாரை பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்திலோ அல்லது பதிவாளர் அலுவலகத்திலோ தயக்கமின்றி அளிக்கலாம். அந்தப் புகார் மீது பல்கலைக்கழகம் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...