யாருமே கோராமல் 46 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த முனைவதன் மர்மம் என்ன?: கே.எஸ். அழகிரி கேள்வி 

தமிழகத்தில் யாருமே கோராமல் 46 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த முனைவதன் மர்மம் என்ன? என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
யாருமே கோராமல் 46 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த முனைவதன் மர்மம் என்ன?: கே.எஸ். அழகிரி கேள்வி 

சென்னை: தமிழகத்தில் யாருமே கோராமல் 46 தொகுதிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த முனைவதன் மர்மம் என்ன? என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர்  புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்; தேனி மக்களவை தொகுதியில் பல்வேறு முறைகேடுகள், அராஜகங்கள் அரங்கேற்றப்பட்டதை அனைவரும் அறிவார்கள். அதற்கு காரணம் அங்கு போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தமிழகத்தின் துணை முதலமைச்சருடைய மகன் என்பதால்தான். வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. அதை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறியதன் மூலம் அங்கு பாரபட்சமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது. இந்நிலையில் 7.5.2019 நள்ளிரவில் 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி தாசில்தார் அலுவலகத்திற்கு கோவையில் இருந்து கொண்டு வரப்பட்டது என்கிற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் எவருக்கும் முன் அறிவிப்பு இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏன் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து உடனடியாக அரசியல் கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தகவல் கொடுக்காமல் இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து கூறிய தமிழக தேர்தல் அதிகாரி மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வந்ததாக கூறுகிறார். ஆனால், யாருடைய வேண்டுகோளின்படி மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பது எவருக்கும் தெரியவில்லை. மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்று எந்த அரசியல் கட்சியும் கோரவில்லை. இந்நிலையில் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஏன் ஈடுபடுகிறது ? இதற்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன ?

ஆனால், தலைமை தேர்தல் அதிகாரி 13 மாவட்டங்களில் உள்ள 15 மக்களவை தொகுதிகளில் 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியிருப்பதாக கூறியிருக்கிறார். மேலும், இதுகுறித்து அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறுகிறார். 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  எந்த அடிப்படையில் முடிவெடுத்தார் என்பதை விளக்க வேண்டும். ஆனால் தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிபட்டியில் 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்று தி.மு.க. வேட்பாளர் கோரியதற்கு இதுவரை தேர்தல் ஆணையம் எந்த பதிலும் கூறவில்லை. ஆனால், எந்த அரசியல் கட்சியும் கோராத நிலையில் 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த மிகமிக ரகசியமாக தமிழக தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன் ? இதற்குப் பின்னால் இருக்கும் உள்நோக்கம் என்ன ? இதுகுறித்து உரிய விளக்கத்தை தலைமை தேர்தல் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.

எந்த அரசியல் கட்சிகளும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்படாத நிலையில் 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறோம். மறுவாக்குப்பதிவை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. எனவே, மறுவாக்குப்பதிவு நடத்துவதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com