
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் (74) உடல்நலக் குறைவு காரணமாக திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் காலமானார்.
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினத்தில் 1944-ஆம் ஆண்டு பிறந்த தோப்பில் முஹம்மது மீரான், ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, அஞ்சு வண்ணம் தெரு, குடியேற்றம் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய சாய்வு நாற்காலி என்ற நாவலுக்கு 1997-இல் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
இதேபோல், அன்புக்கு முதுமை இல்லை, தங்கரசு, அனந்த சயனம் காலனி, ஒரு குட்டித் தீவின் வரைபடம், தோப்பில் முஹம்மது மீரான் கதைகள், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். தெய்வத்தின் கண்ணே, வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு ஆகிய நூல்களை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார்.
இவருக்கு, மனைவி ஜலீலா மீரான், மகள்கள் ஷமீம் அகமது, மிர்ஸாத் அகமது ஆகியோர் உள்ளனர்.
தோப்பில் முஹம்மது மீரான் உடலுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான், திமுக மத்திய மாவட்ட செயலர் அப்துல் வகாப், எழுத்தாளர்கள் சோ.தர்மன், நாறும்பூநாதன், கிருஷி, மலர்வதி, களந்தை பீர்முகமது, காலச்சுவடு கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் கே.ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
ரகுமான்பேட்டையில் உள்ள ஜும்மா மசூதியில் தோப்பில் முஹம்மது மீரான் உடல் வெள்ளிக்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது. தொடர்புக்கு... 99941 53005.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.