அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல் மீது இரு பிரிவுகளில் வழக்கு

தேர்தல் பிரசாரத்தின்போது, இந்து மதத்தினரை இழிவாகப் பேசியது உள்பட இரு பிரிவுகளில் கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல் மீது இரு பிரிவுகளில் வழக்கு


தேர்தல் பிரசாரத்தின்போது, இந்து மதத்தினரை இழிவாகப் பேசியது உள்பட இரு பிரிவுகளில் கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜ் என்பவருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த 12 ஆம் தேதி இரவு அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட  பள்ளபட்டி ஷா கார்னரில் பேசியபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து; அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அவரது கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன் என்றார். இவ்வாறு இந்து மதத்தினரை இழிவுபடுத்திப் பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் கே.வி.ராமகிருஷ்ணன் அரவக்குறிச்சி போலீஸில் செவ்வாய்க்கிழமை செய்தார். இதையடுத்து போலீஸார் அவர் மீது 153-ஏ (மதப் பிரச்னையை தூண்டும் விதத்தில் பேசுதல்), 295-ஏ (ஒரு மதம் குறித்து இழிவாகப் பேசுதல்) ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
சீர்காழியில் கமல்மீது  புகார்:  இந்துக்கள் குறித்து அவதூறு கருத்து கூறியதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மீது சீர்காழி காவல் நிலையில் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் அளித்த புகார் மனுவில்,   மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து எனப் பேசியுள்ளார். மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் நோக்கில் அவர் பேசியிருக்கிறார்.  அரசியல் லாபத்துக்காக தவறான கருத்துகளைக் கூறி, சமூக நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிப்பதோடு, மதக்கலவரத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்டு வரும் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com