
ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பான வழக்கில் 3 பேரின் ஜாமீன் மனுவை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற செவிலிய உதவியாளர் அமுதா (50), குழந்தைகளை விற்பனை செய்வது தொடர்பாக வாடிக்கையாளர் ஒருவரிடம் பேசிய கட்செவி அஞ்சல் ஒலிநாடா சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதனைத் தொடர்ந்து, ராசிபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கானது தற்போது சிபிசிஐடியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள், அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், அருள்சாமி, பர்வீன்பானு, ஹசீனா உள்ளிட்ட ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும், இவ்வழக்கில் சேலம் மாவட்ட சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரான சாந்தி என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், லீலா, பர்வீன்பானு, ஹசீனா என்ற நிஷா ஆகிய 5 பேரும், கடந்த 6-ஆம் தேதி ஜாமின் கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு 8-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, சிபிசிஐடி வசம் வழக்கு உள்ளதை சுட்டிக்காட்டி ஐந்து பேரின் மனுக்களையும் நீதிபதி ஹெச்.இளவழகன் தள்ளுபடி செய்தார். இந்த நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த கருமுட்டை இடைத்தரகர்களான அருள்சாமி, லீலா, செல்வி உள்ளிட்ட மூவரும் ஜாமின் வழங்கக் கோரி, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஹெச்.இளவழகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 3 பேரின் ஜாமீனுக்கு சிபிசிஐடி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இடைத்தரகர்கள் செல்வி, அருள்சாமி மற்றும் லீலா ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.