
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனின் பிரசாரத்துக்குத் தடை விதிக்க வேண்டுமென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அதிமுக மனு அளித்துள்ளது.
இதனை அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாபுமுருகவேல் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை நேரில் அளித்தனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் விதிகளுக்கு எதிராக முதல்வரையும், துணை முதல்வரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி வருகிறார். மேலும் ஒருமையில் பேசி பிரசாரம் செய்கிறார். தேர்தல் பிரசாரத்தின் போது அவசர கால ஊர்திக்குக் கூட அவர் வழிவிடாமல், நாகரிகமற்ற முறையில் பேசியுள்ளார். எனவே, அவரது பிரசாரத்துக்கு முக்கிய சாலைகளில் உள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
தனிநபர் விமர்சனத்தில் தொடர்ந்து ஈடுபட்டும், முதல்வர்- துணை முதல்வரை ஒருமையில் பேசியும், உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பியும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் டிடிவி தினகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.