மருத்துவ மேற்படிப்பு: காலியாக உள்ள 82 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வின்போது நிரம்பாமல் இருக்கும் 82 இடங்களுக்கு  தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என  மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.


முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வின்போது நிரம்பாமல் இருக்கும் 82 இடங்களுக்கு  தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என  மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் பட்ட மேற்படிப்புகளுக்கு 1,761 இடங்கள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 849 இடங்கள் போக, மீதமுள்ள 912 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கானவை.  அவை தவிர, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்காக 181 இடங்கள் உள்ளன.  இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்றது. முதல்கட்ட கலந்தாய்வில் 999 இடங்கள் நிரம்பின. அதன் தொடர்ச்சியாக, மீதமுள்ள இடங்கள், கல்லூரிகளில் சேராதவர்களால் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்பக் கிடைக்கும் இடங்கள் என மொத்தம் 800 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.
அதன் முடிவிலும் 82 இடங்கள் இன்னும் நிரம்பாமல் உள்ளன. அதன்படி தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டில் 48; நிர்வாக ஒதுக்கீட்டில் 34 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. இதனிடையே, முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப்  மதிப்பெண் அண்மையில் குறைக்கப்பட்டது. புதிய கட்-ஆப் மதிப்பெண் விகிதத்தின் கீழ் தகுதியானவர்களும், இதற்கு முன் கலந்தாய்வில் பங்கேற்காதவர்களும், தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  339 முதல் 313 கட் ஆப் பெற்றுள்ள பொதுப்பிரிவினரும்,  294  - 270 கட் ஆப் பெற்றுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டோரும், 316 -  291 கட் ஆப் பெற்ற மாற்றுத்திறனாளிகளும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் புதன்கிழமை (மே 15) மாலை 3 மணிக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை, www.tnhealth.org, www.tnmedicalselection.org  என்ற இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com