
கோப்புப்படம்
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு சென்னையில் இன்று பயிற்சி தொடங்கியது.
மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம், கேரளம், குஜராத் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி, லட்சத் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேங்கள் ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாட்டு பயிற்சி முகாம் சென்னையில் இன்று தொடங்கியது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, சுதீப் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டு வாக்கு எண்ணிக்கை முன் ஏற்பாட்டுப் பணிகள் குறித்து பயிற்சி வழங்கி வருகின்றனர். இந்தப் பயிற்சி முகாமில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா, மூன்று மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களின் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தை பிற்பகலில் பார்வையிட உள்ளனர்.