
உதகை ராஜ்பவன் மாளிகையில் நடைபெற்ற கலாசார விழாவில் இடம் பெற்ற பழங்குடி தோடரின பாரம்பரிய நடனம். (இடது) நடனத்தை ரசிக்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசு அதிகாரிகள்.
உதகை: உதகை கோடை விழாவின் ஒரு பகுதியாக ராஜ்பவன் மாளிகையில் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் பழங்குடியினர் கலாசார விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
உதகை கோடை விழாவை சிறப்பிக்கும் வகையில் ராஜ்பவன் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
பழங்குடியினரின் பாரம்பரியத்தையும், கலைகளையும் பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் எருமாடு கிராமத்தைச் சேர்ந்த அச்சுதா குழுவினரின் முள்ளுக் குரும்பர் கோலாட்டம், தார்நாடுமந்து சத்தியராஜ் தலைமையிலான குழுவினரின் தோடர் நடனம், கூடலூர் மாதன் தலைமையிலான குழுவினரின் பெட்டக் குரும்பர் நடனம், செம்மனாரை வீராசாமி மாரி குழுவினரின் இருளர் நடனம், சோலூர் கோக்கால் உதயகுமார் குழுவினரின் கோத்தர் நடனம், உதகை கிருஷ்ணமூர்த்தி குழுவினரின் படகர் இன மக்களின் பாரம்பரிய இசை நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியின் முடிவில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவரையும் ஆளுநர் பாராட்டினார்.
இதில், தமிழக அரசின் முதன்மைச் செயலரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பெரியய்யா, துணைத் தலைவர் கார்த்திகேயன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட நீதிபதி பி.வடமலை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் முரளிதரன், கூடுதல் நீதிபதி ராஜவேலு, பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.