
சேலம்: சேலத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வருகை தருகிறார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், அவர் திங்கள்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் கமலாபுரம் விமான நிலையத்துக்கு வருகிறார். அவருக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டு, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (மே 21) காலை எடப்பாடியில் உள்ள தனது சொந்தக் கிராமமான சிலுவம்பாளையத்திற்கு செல்வார் என்றும், பின்னர் மீண்டும் சேலத்துக்கு வருகை புரிந்து அதிமுகவினருடன் ஆலோசனை நடத்துவார் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
புதன்கிழமை (மே 22) சேலத்தில் உள்ள தனது வீட்டிலேயே தங்கி ஓய்வெடுக்கும் முதல்வர், மாலையில் காரில் கோவை சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்ல உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத் தேர்தல், 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-இல் சென்னை வீட்டில் முதல்வர் இருப்பார் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வர் வருகையையொட்டி, சேலத்தில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.