
டாப்சிலிப், வரகளியாறு முகாமில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள சின்னத் தம்பி யானைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் ஏற்படுத்தி வந்த சின்னத் தம்பி என்ற காட்டு யானையை வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் ஜனவரி 25 ஆம் தேதி பிடித்தனர். பின்னர் பிடிபட்ட சின்னத் தம்பி யானையை டாப்சிலிப் வரகளியாறு முகாமில் விடுவித்தனர். வரகளியாறு பகுதியில் விடுவிக்கப்பட்ட யானை வனப் பகுதியை விட்டு பிப்ரவரி 1ஆம் தேதி வெளியேறியது.
உடுமலையை அடுத்த மடத்துக்குளம் பகுதியில் சர்க்கரை ஆலை அருகே தனியார் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த சின்னத் தம்பி யானை, வனப் பகுதிக்குள் செல்லாமல் விவசாய நிலங்கள் உள்ள பகுதியிலேயே சில நாள்கள் தங்கியது. பின்னர் வனத் துறையினர் மீண்டும் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் அதனைப் பிடித்து டாப்சிலிப் வரகளியாறு கொண்டு வந்து மரக்கூண்டில் அடைத்தனர்.
அங்கு யானையைப் பழக்க பாகன்கள் நியமிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக கண்காணிக்கப்படுவதாக வனத் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், வனக் கால்நடை மருத்துவர்கள் யானையை சனிக்கிழமை பரிசோதிக்கச் சென்றுள்ளனர். அப்போது, யானைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. இது குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் வனத் துறையினரை தொடர்பு கொண்டு கேட்டபோது பதில் அளிக்க மறுத்தவிட்டனர்.
சின்னத் தம்பி யானையை புகைப்படம் எடுத்து செய்தி வெளியிட அனுமதி கேட்டபோதும் மறுத்துவிட்டனர். இதனால், சின்னத்தம்பி யானைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் பரவியுள்ளது. அதே நேரத்தில் சின்னத்தம்பி யானை நலமாக உள்ளதாகவும், வழக்கமான மருத்துவப் பரிசோதனைதான் மேற்கொள்ளப்பட்டது என்றும் வனத் துறையினர் தெரிவித்தனர்.