
இந்தியா முழுவதும் நுழைந்தாலும், திராவிட கோட்டைக்குள் பாஜகவால் நுழைய முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் வைகோ கூறியது:
மக்களவைத் தேர்தலில் அகில இந்திய அளவில் திமுக 3-ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது . தமிழக நலன்களை திமுக காக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்தியா முழுவதும் பாஜக நுழைந்தாலும், திராவிட கோட்டைக்குள் பாஜகவால் நுழைய முடியவில்லை. முதல்வர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் அடுத்து வருவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
மக்களவைத் தேர்தல் தோல்வியின் மூலம் ஆட்சியில் இருக்கும் தார்மிக உரிமையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இழந்து இருக்கிறார். அவர் ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன. தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றாத வண்ணம் தமிழகத்துக்கான அரணாக திமுக கூட்டணி இருக்கும் என்றார். ஈரோடு மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற கணேசமூர்த்தியும் உடன் இருந்தார்.