
நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்ய உள்ளேன் என்று எச்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில், நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்த குமார். இவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டு 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் வசந்த குமார் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். இதனை அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எச்.வசந்த குமார் இன்று சந்தித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கன்னியாகுமரி எம்பி பதவியை தக்க வைத்துக்கொண்டு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்ய உள்ளேன். சபாநாயகர் நேரம் ஒதுக்கி தந்தவுடன் ராஜினாமா கடிதம் அளிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.