மக்களவைத் தேர்தல்: நகரங்களில் பிரகாசமாக ஒளிர்ந்துள்ள டார்ச் லைட்

மாற்று அரசியல் என்ற முழக்கத்துடன் களம் இறங்கிய நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, எதிர்பார்க்காத அளவுக்கு வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
மக்களவைத் தேர்தல்: நகரங்களில் பிரகாசமாக ஒளிர்ந்துள்ள டார்ச் லைட்
Updated on
2 min read

மாற்று அரசியல் என்ற முழக்கத்துடன் களம் இறங்கிய நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, எதிர்பார்க்காத அளவுக்கு வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

மதுரையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்ஹாசன். அதையடுத்து, தமிழகம் தான் எங்களது இலக்கு எனக் கூறி வந்தார். ஆனால், கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே மக்களவைத் தேர்தல் வந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் அனைத்து தொகுதிகளிலும்  போட்டியிடும் என அறிவித்தார். தான் களத்தில் குதிக்காமல், தனது சகாக்களை மட்டும் களம் இறக்கிய கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

பிரசாரங்களில்  தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, மக்களுக்கான தேவைகளை அரசுகள் செய்ய தவறியதைச் சுட்டிக்காட்டினார். மாற்று அரசியல் என்ற அவரது பிரசாரம், இளைஞர்களிடமும், நடுத்தர வயதினரிடமும் ஈர்ப்பைப் பெற்றிருந்ததை வாக்கு எண்ணிக்கை முடிவில் காணமுடிந்தது. ஆள் பலம், அதிகார பலம்,  பண பலம்,  கூட்டணி பலம் பிரசாரத்துக்கான நட்சத்திரப் பேச்சாளர்கள் என பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் வலம் வந்து கொண்டிருந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்துக்கு கமல்ஹாசனின் பிரசாரம் மட்டுமே கை கொடுத்தது.

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களும் தங்களால் முடிந்த பிரசார உத்திகளைக் கையாண்டு களப் பணியாற்றினர். இளைஞர்களைக் குறிவைத்து காய் நகர்த்தி வந்த மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு, இந்த மக்களவைத் தேர்தலின் மூலம் ஓரளவுக்கு வசப்பட்டிருக்கிறது என்றே கூறலாம். வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் என அரசியல் கட்சிகள் மீது பரவலான புகார்கள் இருந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் மீது அத்தகைய புகார்கள் எழவில்லை. பணத்துக்கு விலை போகக் கூடாது என நினைத்தவர்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கின்றனர்.

மக்கள் நீதி மய்யத்துக்கு கிடைத்துள்ள வாக்குகளில் பெரும்பகுதி முதல் தலைமுறை வாக்காளர்கள்தான் என்கின்றனர் அக்கட்சியினர். தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் 3-ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்த தொகுதிகளில் மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய  டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. அதுவும், சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற பிரதான நகரங்களை உள்ளடக்கிய தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

இருப்பினும், கமல்ஹாசனின் பிரசாரம் நகரங்களில் எடுபட்ட அளவுக்கு கிராமங்களைச் சென்றடையவில்லை. கிராமப் பகுதிகளையும் ஈர்த்திருக்கும்பட்சத்தில், மக்கள் நீதி மய்யத்தின் வாக்கு சதவீதம் இன்னும் அதிகரித்திருக்கும். உதாரணத்துக்கு, மதுரை மக்களவைத் தொகுதியில் கிராமங்களை உள்ளடக்கிய  மேலூர் தொகுதியில், மக்கள் நீதி மய்யம் 1,958 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறது. கிராமங்களும், நகரங்களும் அடங்கிய கிழக்கு தொகுதியில் 14,698 வாக்குகளும், வடக்கு தொகுதியில் 14,885 வாக்குகளும் பெற்றுள்ளது.

அதேநேரம், நகரப் பகுதிகளான மதுரை மேற்கில் 18,277, மதுரை மத்தியில் 16,563, மதுரை தெற்கில் 18,461 வாக்குகளைப் பெற்றிருக்கிறது.  இருப்பினும், கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே சந்தித்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதிலும், கிராமங்களைக் காட்டிலும், நகரப் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட்' பிரகாசமாக ஒளிர்ந்திருக்கிறது என்னவோ உண்மைதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com