12ஆம் வகுப்பு தாவரவியல் பாடப் புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய குறிப்புகள்

12ஆம் வகுப்பு தாவரவியல் பாடப் புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன
12ஆம் வகுப்பு தாவரவியல் பாடப் புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய குறிப்புகள்
Updated on
1 min read

12ஆம் வகுப்பு தாவரவியல் பாடப் புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. 

திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி வாண்டையார்- முத்துலெட்சுமி தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் நெல்.ஜெயராமன். பள்ளிக் கல்வியை முடித்த இவர், திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் அச்சகம் ஒன்றில் வேலை செய்தார். பின்னர், நுகர்வோர் பாதுகாப்புக் குழுவைத் தொடங்கி, தீவிரமாக செயல்பட்டதன் காரணமாக, நுகர்வோர் பாதுகாப்பு குறித்த அரசு சார்பிலான பல்வேறு அமைப்புகளில் ஆலோசகராக விளங்கினார்.  மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கான நுகர்வோர் மன்றங்களைத் தொடங்கியதுடன், நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் மூலமாக பலருக்கு இழப்பீடுகளையும் பெற்றுத்தந்துள்ளார். 

இதன் காரணமாக, கடந்த காலங்களில் நுகர்வோர் ஜெயராமன் என அழைக்கப்பட்டார்.  பின்னர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிரியேட் நமது நெல்லைக் காப்போம் என்ற அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளராக செயல்படத் தொடங்கினார். இயற்கை விவசாயத்தின் மீது தனி அக்கறை கொண்டு, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டு, அழிந்துபட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தல், இயற்கை முறை விவசாயத்தில் விவசாயிகளின் கவனத்தை ஈர்க்கச் செய்தல் பணிகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.  தனது நீண்ட நெடிய தேடல்கள் மூலம், மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, மைசூர் மல்லி, கிச்சடி சம்பா உள்பட சுமார் 170-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுத்த பெருமைக்குரியவர் நெல் ஜெயராமன். 

ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி, ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக 2 கிலோ வழங்கி, அடுத்த ஆண்டில் 4 கிலோவாக பெறும் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகளை பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்ய வைத்தவர். அழிவின் விளிம்பில் இருந்த பாரம்பரிய நெல் ரகங்களையும், இயற்கை விவசாயத்தையும் காப்பாற்ற சிறப்பாக பங்காற்றியவர் என்ற அடிப்படையில் ஜெயராமனை, இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் நெல் ஜெயராமன் என அடையாளப்படுத்தினார். இவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி காலமானார். 

இந்நிலையில் விவசாய ஆராய்ச்சி, பாரம்பரிய நெல் மீட்பு தொடர்பாக 12ஆம் வகுப்பு தாவரவியல் புதிய பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதில், ஆராய்ச்சியாளர் நார்மன் ஈ போலாக், சுவாமிநாதன் மற்றும் நெல் ஜெயராமன் பற்றியும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அரசின் இந்த முயற்சிக்கு நெல் ஜெயராமன் குடும்பபத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com