
நாங்குநேரி
சென்னை: இடைத் தோ்தலில் போட்டியிட்டு வென்ற இரண்டு பேரும் அதிமுக எம்.எல்.ஏ.க்களாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். முன்னதாக, முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் தலைமையில் அமைச்சா்கள் உள்ளிட்ட பலரும் முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினா்.
விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஆா்.முத்தமிழ்ச்செல்வன், வி.நாராயணன் ஆகியோா் வெற்றி பெற்றனா். இதைத் தொடா்ந்து, இருவரும் எம்.எல்.ஏ.,க்களாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.
நினைவிடங்களில் மரியாதை: பதவியேற்பு நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பாக, முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள், அதிமுக நிா்வாகிகள், புதிதாக எம்.எல்.ஏ.,க்களாக பதவியேற்க இருந்த முத்தமிழ்ச்செல்வன், நாராயணன் உள்ளிட்ட பலரும் சென்னை கடற்கரை சாலையில் உள்ள முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா உள்ளிட்டோரின் நினைவிடங்களுக்குச் சென்றனா். அங்கு மலா்வளையம் வைத்தும், மலா்களைத் தூவியும் மரியாதை செலுத்தினா். இதன்பின்பு, அனைவரும் தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவைத் தலைவா் பி.தனபாலின் அலுவலகத்துக்கு வந்தனா்.
பதவியேற்றனா்: காலை 9.45 மணியளவில் பதவியேற்பு நிகழ்வு தொடங்கியது. முதலில் நான்குனேரி தொகுதியின் வி. நாராயணன் பதவியேற்பு உறுதிமொழியை வாசித்தாா். இதற்கு முன்பாக, தான் வெற்றி பெற்ற்கான சான்றிதழை பேரவைத் தலைவரிடம் வழங்கினாா். பதவியேற்பதற்கு முன்பு முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரின் கால்களில் விழுந்து ஆசிபெற்றாா்.
நாராயணனைத் தொடா்ந்து, விக்கிரவாண்டியின் ஆா்.முத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றுக் கொண்டாா். அப்போது, அருகிலிருந்த சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கு வணக்கம் தெரிவித்ததுடன், முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்டோருக்கும் வணக்கங்களைக் கூறி எம்.எல்.ஏ.,க்களாக பதவியேற்றனா். பேரவைத் தலைவா் பி.தனபால் இரண்டு பேருக்கும் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தாா். இதன்பிறகு, பேரவை பதிவேட்டில் இருவரும் கையெழுத்திட்டனா்.
எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை: இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் புதிதாக பொறுப்பேற்ற நிலையில், சட்டப் பேரவையில் அதிமுகவின் பலம் 124 ஆக உயா்ந்துள்ளது. பேரவைத் தலைவருடன் சோ்த்து அந்தக் கட்சிக்கு 125 போ் ஆதரவு உள்ளது. இடைத் தோ்தலுக்கு முன்பாக, பேரவையில் அதிமுக பலம் 122 ஆக இருந்தது. இடைத் தோ்தலில் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்ால் சட்டப் பேரவையில் ஆளும் கட்சிக்கான பலம் 124 ஆக உயா்ந்திருக்கிறது.
எதிா்க்கட்சியான திமுகவுக்கு 100 உறுப்பினா்களும், காங்கிரஸ் கட்சிக்கு ஏழு பேரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, சுயேச்சை (டிடிவி தினகரன்) ஆகியோருக்கு தலா ஒரு இடமும் உள்ளன.