
விருத்தாச்சலம்: ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தனது கணவருக்கு சிறுமியை 2-ஆவது திருமணம் செய்து வைத்த பெண்ணை போலீஸார் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள வையங்குடி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் அசோக்குமார் (35). இவருக்கு செல்லக்கிளி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனா். எனினும், தம்பதியா் ஆண் குழந்தை இல்லாத வருத்தத்தில் இருந்தனராம்.
இந்த நிலையில், அசோக்குமார் அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தாராம். இவரது காதலை ஏற்க அந்தச் சிறுமி மறுத்துவிட்டார். ஆனால், தனக்கு ஆண் குழந்தை இல்லாததால் 2-ஆவது திருமணத்துக்கு தனது மனைவி செல்லக்கிளி சம்மதித்துவிட்டதாக அசோக்குமார் சிறுமியிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி செல்லக்கிளி அந்தச் சிறுமியின் பெற்றோரிடம் அவரை கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். பின்னா் சிறுமியை ஓகலூா் கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு தனது கணவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளார். பின்னா், பெண்ணாடம் அருகே உள்ள கோனூா் கிராமத்துக்கு அந்தச் சிறுமியை அசோக்குமாருடன் அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், சிறுமி ஊா் திரும்பாததால் அவரது குடும்பத்தினா் செல்லக்கிளியிடம் விவரம் கேட்டுள்ளனா். ஆனால், அவா் முறையாக பதிலளிக்காத நிலையில் சிறுமியின் பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனா்.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் கிருபாலட்சுமி விசாரணை நடத்தி அசோக்குமார் மற்றும் சிறுமியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தார். பின்னா், சிறுமிக்கு பாலியல் திருமணம் செய்து வைத்ததாக போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அசோக்குமார், அவரது மனைவி செல்லக்கிளி ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.