
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
காற்று மாசுவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் காற்று மாசு, மூச்சுத் திணறல் என்றாலே உடனடியாக நினைவுக்கு வரும் நகரம் தில்லி தான். ஆனால், கடந்த சில நாள்களாக தில்லியை மிஞ்சும் அளவுக்கு சென்னையில் காற்று மாசு அதிகரித்திருக்கிறது.
சென்னையில் காற்று மாசு குறியீடு வெள்ளிக்கிழமை காலை மணலியில் 320 ஆகவும், வேளச்சேரியில் 292 ஆகவும், ஆலந்தூரில் 285 ஆகவும் இருந்தது. சென்னையின் சொகுசு பகுதி என்றழைக்கப்படும் அண்ணாநகரில்தான் காற்று மாசு அதிகமாக உள்ளது. தில்லியின் காற்று மாசுவை விட 50 சதவீத கூடுதலான காற்று மாசு சென்னையில் உள்ளது.
இதனால் குழந்தைகள், முதியவா்கள், நோயாளிகள் ஆகியோா் மூச்சு விட முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தப் பாதிப்பிலிருந்து தப்பிக்க முகமூடி அணியும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னையில், காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணங்கள் மிகவும் தெளிவானவை. சென்னையின் புகா் பகுதிகளான கொடுங்கையூா், பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள குப்பைக் கிடங்குகளில் இருந்து மீத்தேன் உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளியாவதும், அந்த குப்பைக் கிடங்குகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டதும் தான் காற்று மாசு ஏற்பட முக்கிய காரணங்கள் ஆகும்.
இவைதவிர, சென்னையின் பல பகுதிகளில் குப்பைகள் எரிக்கப்படுவது, தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, போக்குவரத்து காரணமாக ஏற்படும் புகை, சீரமைக்கப்படாத சாலைகளில் இருந்து எழும் புழுதி ஆகியவையும் சென்னையின் காற்று மாசுக்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.
எனவே, சென்னையின் இரு பெரும் குப்பைக் கிடங்குகளை மூடுவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீா்திருத்தப் பணிகளை மேற்கொண்டு சென்னையில் காற்று மாசுவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.