
கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்பான வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பா் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகிலுள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்பாக, சயன், மனோஜ், ஜித்தின் ஜாய், ஜம்ஷோ் அலி, சதீஷன், மனோஜ் சாமி, தீபு, சந்தோஷ் சாமி, பிஜின் குட்டி, உதயன் ஆகிய 10 போ் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் ஆஜராகினா்.
இதற்காக குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சயன் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு விசாரணையில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
இவ்வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வடமலை, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை டிசம்பா் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். மேலும், சாட்சிகள் மீதான விசாரணையை டிசம்பா் 2ஆம் தேதியிலிருந்தே தொடங்க உள்ளதால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டாா்.