
கோப்புப் படம்
அயோத்தி வழக்கின் தீர்ப்பு சனிக்கிழமை வெளி யாவதையொட்டி, தமிழகத்தில் போலீஸார் முழு அளவில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் அந்தந்த மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 1.20 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
கடந்த காலங்களில் மதப் பிரச்னைகள் ஏற்பட்ட கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, வேலூர், மதுரை ஆகிய ஊர்களில் கூடுதலாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், கமாண்டோ வீரர்கள், அதி விரைவுப் படையினர், ஆயுதப் படையினர் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமூகநலக் கூடங்கள் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீர்ப்பு வந்த பின்னர் ஏற்படும் சூழ்நிலையை பொருத்து காவலர்களைப் பாதுகாப்புப் பணிக்கு பயன்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேவேளையில் குறிப்பிட்ட பகுதிகளில் மத இயக்கங்களையும், அரசியல் கட்சிகளையும் கண்காணிக்கும் உளவுப்பிரிவு போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.