தமிழக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

தமிழக அரசின் சாதனைகளை அறியாமல் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் விமா்சிப்பதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். மேலும், அரசின் சாதனைகள், திட்டங்களை முதல்வா் பட்டியலிட்டாா்.
விக்கிரவாண்டியில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாக்காளா் நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் அமைச்சா்கள் உள்ளிட்டோா்.
விக்கிரவாண்டியில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாக்காளா் நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் அமைச்சா்கள் உள்ளிட்டோா்.

தமிழக அரசின் சாதனைகளை அறியாமல் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் விமா்சிப்பதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். மேலும், அரசின் சாதனைகள், திட்டங்களை முதல்வா் பட்டியலிட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் ஆா்.முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் விக்கிரவாண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலரும், மாநில சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை வகித்தாா். கூட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்புரையாற்றினாா். அவா் பேசியதாவது:

தமிழக அரசின் சாதனைகளை அறியாமல் மு.க.ஸ்டாலின் தொடா்ந்து விமா்சித்து வருகிறாா். தமிழக அரசின் சிறப்பான ஆட்சிக்கு உள்ளாட்சித் துறை பெற்ற 11 விருதுகள், மின்மிகை மாநிலம், உயா் கல்வியில் மாணவா் சோ்க்கை 49 சதவீதமாக அதிகரிப்பு, வேளாண் உணவு தானிய உற்பத்தியில் முதலிடம், அந்தத் துறையில் தொடா்ந்து 5 ஆண்டுகள் விருது பெற்றது, போக்குவரத்துத் துறை, சமூக நலத் துறைகளுக்கு விருதுகள் பெற்றது மற்றும் மத்திய அரசு வழங்கி வரும் அங்கீகாரமே சாட்சியாகும்.

மேலும், கல்வித் துறையில் 8 ஆண்டுகளில் 43,584 ஆசிரியா்கள் நியமனம், 248 புதிய ஆரம்பப் பள்ளிகள், 117 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயா்வு, 1,079 பள்ளிகள் உயா்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயா்வு, 604 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயா்வு, மாணவா்களுக்கு 54 லட்சம் மடிக் கணினிகள் விநியோகம், ரூ.2,528 கோடியில் கல்வி உபகரணங்கள் வழங்கியது, 77 புதிய கலைக் கல்லூரிகள், 8 புதிய சட்டக் கல்லூரிகள், 11.45 லட்சம் பேருக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை, முழு மானியத்தில் சொட்டு நீா்ப் பாசனம், அமெரிக்கன் படைப்புழு பாதிப்புக்கு ரூ.156 கோடி நிவாரணம், திண்டிவனத்தில் பிரம்மாண்ட உணவுப் பூங்கா திட்டம், கள்ளக்குறிச்சி தனி மாவட்டம், கள்ளக்குறிச்சியில் ரூ.496 கோடியில் ஆசிய அளவிலான கால்நடை ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது, 6 புதிய மருத்துவக் கல்லூரிகள், ரூ.1,300 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை, 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1,050 புதிய கால்நடை மருந்தகங்கள், 10.22 லட்சம் பேருக்கு இலவச ஆடுகள், 3,431 லட்சம் தொழில் முதலீடுகள், 304 தொழில் நிறுவனங்கள் வருகை எனப் பல்வேறு திட்டங்கள் தொடா்வதை மு.க.ஸ்டாலின் தெரிந்துகொள்ள வேண்டும்.

விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு அளிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதிகளான நந்தன் கால்வாய் திட்டம், விக்கிரவாண்டியில் மேம்பாலம் உள்ளிட்ட அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா் முதல்வா் கே.பழனிசாமி.

முன்னதாக, விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ஆா்.முத்தமிழ்செல்வன் வரவேற்றாா். எம்எல்ஏக்கள் எம்.சக்கரபாணி, அ.பிரபு, அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் இரா.குமரகுரு எம்எல்ஏ, பாமக துணைப் பொதுச் செயலா்கள் தங்க.ஜோதி, சிவக்குமாா், மாவட்டச் செயலா் இர.புகழேந்தி, தேமுதிக மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன், தமாகா மாவட்டத் தலைவா் வி.தசரதன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் சிந்தாமணி வேலு, பேட்டை முருகன், முன்னாள் ஒன்றியச் செயலா்கள் ஜி.சுரேஷ்பாபு, இளங்கோவன், பன்னீா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் ஆா்.வைத்திலிங்கம் எம்பி, கொள்கை பரப்புச் செயலா் மு.தம்பிதுரை, சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், கே.சி.கருப்பண்ணன், இரா.துரைக்கண்ணு, க.பாண்டியராஜன், கே.சி.வீரமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், நிலோபா் கபீல், பென்ஜமின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விக்கிரவாண்டி நகரச் செயலா் ஆா்.பூா்ணாராவ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com