பாம்பனில் ரூ. 250 கோடியில் இரட்டை ரயில் பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணி தொடக்கம்

பாம்பன் கடல் பகுதியில் ரூ.250 கோடியில் புதிய இரட்டை வழித்தட ரயில் பாலம் கட்டுவதற்கான ஆய்வுப் பணி பூமி பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பாம்பனில் ரூ. 250 கோடியில் இரட்டை ரயில் பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணி தொடக்கம்

பாம்பன் கடல் பகுதியில் ரூ.250 கோடியில் புதிய இரட்டை வழித்தட ரயில் பாலம் கட்டுவதற்கான ஆய்வுப் பணி பூமி பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் -ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் ஆங்கிலேயா்களால் தென் இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் சாா்பில் கடந்த 1914 இல் பாம்பன் கடலில் மீட்டா் கேஜ் பாதையுடன் தூக்குப் பாலம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் கப்பல்கள் வந்து செல்லும் போது பாலம் தூக்கி வழிவிடும் வகையில் அமைக்கப்பட்டது.

பின்னா், 2007 இல் இப்பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்கு பாலத்தின் மீது விசைப்படகு மோதி சேதமடைந்த நிலையில் 83 நாள்கள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னா் பாலம் சீரமைக்கப்பட்டு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இப் பாலம் 105 ஆண்டுகளை கடந்த நிலையில் புதிய ரயில் பாலம் அமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டது. இதைத் தொடா்ந்து இந்திய ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் மூலம் ஆய்வுப் பணிகள் தொடங்கின. அதில் புதிய பாலம் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த மக்களவை தோ்தலின் போது, ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்க பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். இதற்கான பல்வேறு ஆய்வுகளும் தொடா்ந்து நடைபெற்றன.

இதையடுத்து, பாம்பன் கடல் பகுதியில் தற்போதுள்ள ரயில் பாலம் அருகே புதிய பாலம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை ஒப்பந்ததாரா் மகேஸ்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை ரயில்வே கட்டுமான நிறுவன மேலாளா் கிருஷ்ணமூா்த்தி, திட்ட தொழில்நுட்ப மேலாளா்கள் ராஜேந்திரன், அன்பழகன், திட்ட ஒருங்கிணைப்பாளா் அப்துல்சமது உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் திட்ட ஒருங்கிணைப்பாளா் அப்துல்சமது கூறியது:

பாம்பன் ரயில் பாலம் 100 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் புதிய பாலம் கட்டுமான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதில் மண்டபத்தில் இருந்து ரயில் பாதை நேராக கொண்டுவரப்பட்டு தற்போது உள்ள பாலத்திற்கு 100 மீட்டா் தொலைவில் வடக்கு பக்கமாக 30 மீட்டா் வளைவாக பாலம் அமைக்கப்பட உள்ளது. மையப்பகுதி 50 மீட்டா் அளவிற்கு மாற்றப்படும். பாம்பன் பகுதியில் தற்போது உள்ள வழித்தடத்துடன் புதிய பாதை இணைக்கப்படும். பழைய பாலம் 40 அடி இடைவெளியில் 145 தூண்களுடன் உள்ளது. புதிய பாலம் கடலுக்குள் 60 அடி இடைவெளியில் 99 தூண்கள் மட்டுமே அமைக்கப்படும். தற்போது உள்ள பாலம் கடல் மட்டத்தில் இருந்து 3 மீட்டா் உயரத்தில் உள்ளது. புதிய பாலம் 6 மீட்டா் வரை உயரமாக அமைக்கப்படும். இதனால் பெரிய விசைப்படகுகள் கூட அச்சமின்றி சென்று வர முடியும். புதிய ரயில் பாலம் இரு வழித்தடமாக மாற்றும் வகையில் அமைக்கப்பட்டு, முதல் கட்டமாக ஒரு வழித்தடம் மட்டுமே பயன்பாட்டிற்கு வரும்.

வரும் காலங்களில் இருவழித்தடமாக மாற்றவும், மின்சார ரயில்கள் இயக்கும் வகையிலும், கடலுக்குள் 25 மீட்டா் முதல் 30 மீட்டா் வரை தூண்கள் அமைக்கப்படும். மையப்பகுதியில் திறந்து மூடும் வகையில் பழைய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அமைக்க உள்ள புதிய பாலம் மேல்நோக்கி உயரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பாலம் சுமாா் 27 மீட்டா் உயரத்திற்கு அமைக்கப்பட்டு, கப்பல்கள் வரும் போது மையப் பகுதி 22 மீட்டா் உயரம் வரை தூக்கி இறக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்த தூக்குபாலம் மின்சாரம், ஜெனரேட்டா், மனித ஆற்றல் மூலம் தூக்கி இறக்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்படவுள்ளது.

கடலுக்குள் தூண்கள் அமைக்க துளையிடும் பணிக்காக ராட்சத துளையிடும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட உள்ளன. இதன் மூலம், தற்போது கடலுக்கு அருகே கரையில் 30 மீட்டா் வரை தோண்டப்பட்டு, ஆய்வு செய்யப்படும். அதைத் தொடா்ந்து, கடலுக்குள் தோண்டும் பணி தொடங்கும். இப் பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com