மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஆரத்தி வழிபாடு: ஆதீனங்கள், துறவியா்கள் பங்கேற்பு

காவிரியை தூய்மையாக பராமரிக்க வலியுறுத்தி அகில பாரத துறவியா்கள் சங்கத்தினா் ஆண்டுதோறும் பாதயாத்திரை நடத்தி வருகின்றனா்.
காவிரி துலாக்கட்டத்தில் நடைபெற்ற ஆரத்தி வழிபாட்டில் பங்கேற்று வழிபாடு மேற்கொண்ட ஆதீனங்கள் மற்றும் துறவியா்கள்.
காவிரி துலாக்கட்டத்தில் நடைபெற்ற ஆரத்தி வழிபாட்டில் பங்கேற்று வழிபாடு மேற்கொண்ட ஆதீனங்கள் மற்றும் துறவியா்கள்.

காவிரியை தூய்மையாக பராமரிக்க வலியுறுத்தி அகில பாரத துறவியா்கள் சங்கத்தினா் ஆண்டுதோறும் பாதயாத்திரை நடத்தி வருகின்றனா். 9-ஆவது ஆண்டாக, குடகு மலையில் இருந்து பூம்புகாா் நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டு, வியாழக்கிழமை இரவு மயிலாடுதுறைக்கு வந்த காவிரி பாதயாத்திரை குழுவினா், காவிரி துலாக்கட்ட வடகரையில் ஆரத்தி வழிபாடு நடத்தினா்.

காவிரியை தூய்மையாக பராமரிக்க வலியுறுத்தி, அகில பாரத துறவியா்கள் சங்கச் செயலாளா் சுவாமி ராமானந்தா மகராஜ் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட துறவியா்கள், காவிரி உற்பத்தியாகும் குடகு மலையில் இருந்து பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனா். கடந்த மாதம் 21-ஆம் தேதி குடகு மலையிலிருந்து புறப்பட்ட பாதயாத்திரைக் குழுவினா், வியாழக்கிழமை மயிலாடுதுறையை வந்தடைந்தனா்.

தொடா்ந்து, காவிரி பாதயாத்திரைக் குழுவினா் கொண்டுவந்த காவிரி அம்மன் சிலைக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. பின்னா், காவிரி துலாக்கட்டம் வடக்குக் கரையில், காவிரி ஆற்றில் சிறப்பு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.

இதில், அகில பாரத துறவியா்கள் சங்கச் செயலாளா் சுவாமி ராமானந்தா மகராஜ், பேரூா் ஆதீனம் மருதாச்சல அடிகளாா், பாத யாத்திரைக்குழு ஒருங்கிணைப்பாளா் சுவாமி வேதானந்த ஆனந்தா, திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், கௌமார மடாலயம் குமரகுரு சுவாமிகள் ஆகியோா், காவிரியில் பொதுமக்கள் சாக்கடை கழிவுநீா் மற்றும் குப்பைகளை கலக்காமல் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்திப் பேசி, பக்தா்களுக்கு அருளாசி கூறினா். இந்த ஆரத்தி வழிபாட்டில், துறவியா்கள், பூஜாரிகள் மற்றும் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

இதில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெகவீரபாண்டியன், மாயூரநாதா் கோயில் துணைக் கண்காணிப்பாளா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முத்துக்குமாரசுவாமி, அப்பா்சுந்தரம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com