
சேலத்தில் புகழேந்தி பேட்டி
அமமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைவதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகிய டிடிவி தினகரன் ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கினார். இதன்பின்னர் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். செந்தில் பாலாஜி மற்றும் தங்கத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் அமமுகவைச் சேர்ந்த புகழேந்தி, அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் தினகரன் குறித்து தவறாக பேசிய ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. இதனால் இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. இருந்தபோதிலும், 'நான் பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது; அமமுக தான் எனது கட்சி' என்று புகழேந்தி கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, இன்று சேலத்தில் அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய புகழேந்தி, விரைவில் தனது ஆதரவாளர்களுடன் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தினகரனுடன் இணைந்து தவறிழைத்து விட்டேன் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று அதிமுகவில் இணைய இருப்பதாகவும் கூறியுள்ளார்.