நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னையைச் சேர்ந்த மாணவரை நவம்பர் 19-ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அவரது மகன் ரிஷிகாந்த் தாக்கல் செய்த மனு: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எங்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ரசாயன நிறுவனம் ஒன்றில் தலைவராக உள்ள என்னையும், தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கச் சேர்ந்த எனது மகனையும் ஆள்மாறாட்ட வழக்கில் போலீஸார் தேடி வருகின்றனர்.
நாங்கள் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபடவில்லை. நீட் தேர்வுக்கான அனுமதி கடிதத்தைப் பதிவிறக்கம் செய்தபோது எனது மகனின் புகைப்படத்தில் மாறுபாடு இருந்தது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகியபோது, அனுமதிக் கடிதத்தில் மாறுதல் செய்வதற்கான காலக்கெடு முடிந்தது எனக் கூறி தேர்வு எழுதலாம் என அறிவுறுத்தினர். ஆனால், தற்போது தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகப் போலீஸார் எங்கள் மீது வழக்குப்பதிந்துள்ளனர். எனவே, எனக்கும் எனது மகனுக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். ன
இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தால் மாணவர் ரிஷிகாந்த் கைது செய்யப்படமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மாணவரை நவம்பர் 19-ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.