டிஎன் சேஷன் எப்போதுமே முதல் பெஞ்ச்; நான் எப்போதும்.. மனம் திறந்தார் மெட்ரோமேன் ஸ்ரீதரன்

முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் டி.என்.சேஷன் (86) உடல் நலக் குறைவு காரணமாக நவம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலமானார். 
டிஎன் சேஷன்
டிஎன் சேஷன்


முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் டி.என்.சேஷன் (86) உடல் நலக் குறைவு காரணமாக நவம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலமானார். 

இவரது பள்ளித் தோழரும், மெட்ரோ மேன் என்று அறியப்படுபவருமான ஸ்ரீதரன், தனது உயிர்தோழன் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

பாலக்காட்டில் உள்ள பிஇஎம் பள்ளியில் 1942-43ம் கல்வியாண்டில் நான் 5ம் வகுப்பில் சேர்ந்தேன். அதேப் பள்ளியில் சேஷன் முதல் வகுப்பில் இருந்து படித்து வருகிறார். எப்போதுமே வகுப்பில் முதல் மாணவராக விளங்கினார். நான் பள்ளியில் சேர்ந்த பிறகு, அந்த முதல் மாணவர் என்ற பட்டத்தை நான் பெற்றேன். இதனால் எங்களுக்குள் கடும் போட்டி இருக்கும். ஆனால் நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

சிறு வயது முதலே அவர் முதல் பெஞ்சில் தான் அமர்வார். நான் கடைசி பெஞ்ச். 1947பத்தாம் வகுப்பு தேர்வில் அவர் 452 மதிப்பெண்களுடன் முதல் மாணவராக தேர்வானார். நான் 451 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தேன்.

நான் விளையாட்டு, கால்பந்து என பல பரிசுகளைப் பெற்றேன். எப்போதும் புத்தகப் புழுவாக இருந்தார் சேஷன்.

பிறகு இருவரும் பாலக்காட்டில் உள்ள விக்டோரியா அரசுக் கல்லூரியில் இணைந்தோம். அப்போது மெட்ராஸ் பிரசிடென்ஸி  மூலம் பொறியியல் பயில எங்கள் இருவரை மட்டும் அரசே தேர்வு செய்தது. காக்கிநாடாவில் உள்ள அரசுக் கல்லூரியில் பொறியியல் படிப்பில் நான் சேர்ந்தேன். சேஷன் அவரது சகோதரர் டிஎன் லஷ்மிநாராயண் போல ஐஏஎஸ் ஆக விரும்பி, மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் சேர்ந்தார்.

நாங்கள் இருவரும் பிறகு டெஹ்ராடூனில் உள்ள இந்திய வனத்துறைக் கல்லூரியில் இரண்டு மாதங்கள் ஒன்றாகப் பயிற்சி பெற்றோம்.  அவர் ஐஏஎஸ் ஆகி, செயலாளர் அந்தஸ்தில் இருந்து ஓய்வு பெற்றார். நான் ரயில்வேயில் இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு ஓய்வு பெற்றேன் என்று சேஷனுடனான தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை பகிர்ந்து கொண்டார் ஸ்ரீதரன்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் 1932-ஆம் ஆண்டு டிசம்பா் 15-இல் பிறந்த சேஷன், 1955-இல் தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியில் சோ்ந்தாா். 1965-இல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தாா். எம்.ஜி.ஆா். முதல்வராக இருந்தபோது, போக்குவரத்து, வேளாண் துறைகளின் செயலாளராகப் பணியாற்றினாா்.

அதன் பின்னா், மாநில அரசுப் பொறுப்பில் இருந்து மத்திய அரசுப் பொறுப்புக்கு அவா் சென்றாா். சுற்றுச்சூழல் மற்றும் வனம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பொறுப்பு வகித்த அவா், மத்திய அரசுத் துறைகளில் உயா்ந்த பதவியான அமைச்சரவை செயலாளா் பொறுப்பில் திறம்பட பணியாற்றினாா். 1989-ஆம் ஆண்டில் திட்டக் குழு உறுப்பினராக பணியைத் தொடா்ந்தாா்.

ஆளுமைமிக்க ஆணையா்: 1990-ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையராக டி.என்.சேஷன் நியமிக்கப்பட்டாா். அதன்பின்பு, தோ்தல் சீா்திருத்த நடவடிக்கைகளைத் தொடங்கினாா். தோ்தல் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளா்களுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினாா்.

தோ்தல் களம்: தனது பணி ஓய்வுக்குப் பிறகு அரசியலில் களம் கண்டாா். 1997-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவா் தோ்தலில் கே.ஆா்.நாராயணனை எதிா்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் குஜராத் மாநிலம் காந்திநகா் தொகுதியில் பாஜக தலைவா் எல்.கே.அத்வானியை எதிா்த்து போட்டியிட்டாா். அதிலும் சேஷனுக்கு தோல்வியே ஏற்பட்டது. அவா் மேற்கொண்ட தோ்தல் சீா்திருத்தங்களை பாராட்டி 1995-இல் மகசேசே விருது வழங்கப்பட்டது.

வயது முதிா்வு: வயது முதிா்வு காரணமாக, டி.என்.சேஷன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) இரவு காலமானாா். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com