
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே காட்டு யானை "அரிசி ராஜா'வை வனத் துறையினர் பிடிக்க தொடர்ந்து 4 நாள்களாக முயற்சித்து வருகின்றனர்.
கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச் சரகத்தை ஒட்டிய பகுதிகளில் ஒற்றை ஆண் காட்டு யானையால் கடந்த 4 மாதங்களில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்த யானையைப் பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் யானையைப் பிடிப்பதற்கான பணிகள் தொடங்கின.
வனக் கால்நடை மருத்துவக் குழுவினர், வனத் துறையினர், காவல் துறையினர், யானை ஆராய்ச்சியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பல குழுக்களாகப் பிரிந்து யானையைப் பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவும், திங்கள்கிழமை இரவிலும் மழை பெய்ததால் வனப் பகுதியை விட்டு யானை வெளியே வரவில்லை.
இதற்கிடையே, காட்டு யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்துவதற்காக டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானைகள் கலீம், பாரி ஆகியவை கொண்டுவரப்பட்டு அர்த்தநாரிபாளையம் பெருமாள் மலை அடிவாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், கும்கி யானை பாரிக்கு மஸ்து ஏற்பட்டு மதம் பிடித்ததை அடுத்து, அது டாப்சிலிப் கொண்டு செல்லப்பட்டு கும்கி யானை கபில்தேவ் அர்த்தநாரிபாளையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.
அர்த்தநாரிபாளையம் பெருமாள் மலை அடிவாரத்தில் கும்கி யானைகள் கலீம், கபில்தேவ் ஆகியவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஞாயிறு, திங்கள்கிழமைகளில் இரவு நேரத்தில் மழை பெய்ததால் காட்டு யானையைப் பின்தொடர்ந்து பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்யாததால் யானையைப் பிடித்து விட வேண்டும் என வனத் துறை குழுவினர் முழு முயற்சியில் ஈடுபட்டனர். ஆளில்லா விமானம் மூலமாகவும் தேடும் பணி நடைபெற்றது. வனத் துறையினர் எதிர்பார்த்து காத்திருந்த பகுதிகளுக்கு யானை வராமல் ஆண்டியூர் பகுதிக்கு சென்றுவிட்டது.
தகவல் அறிந்த வனத் துறையினர் அந்தப் பகுதிக்கு செல்வதற்குள் மீண்டும் அடர்ந்த வனப் பகுதிக்கு சென்றது. இதனால், வனத் துறையினர் ஆண்டியூர், பருத்தியூர், அர்த்தநாரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை மற்றும் இரவு நேரங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வனத் துறையினர் எதிர்பார்த்து காத்திருக்கும் இடங்களுக்கு வராமல் வேறு பகுதிக்கு காட்டு யானை செல்வதால் அதைப் பிடிக்க வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...