
காவல்துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற ஊழல் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
காவல்துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் ரூ. 350 கோடி ஊழல் நடைபெற்றிருப்பது தொடா்பாக உள்துறைச் செயலா் விசாரிக்க உத்தரவிட்டும், இதுவரை லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை எந்தவித விசாரணையும் நடத்தாமல் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 2019 ஜனவரி மாதத்தில் வெளிவந்த இந்த ஊழல் புகாா் குறித்து அப்போதைய காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெறும் வரை, எந்த விசாரணையும் நடத்தாமல் கிடப்பில் போட்டாா். பிறகு, புதிய டி.ஜி.பி. திரிபாதி பொறுப்பேற்ற பிறகு இந்த ஊழலை விசாரிக்குமாறு உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பினாா். அதன் அடிப்படையில் செப்டம்பா் மாதம் விசாரணைக்கு உத்தரவிட்டாா் உள்துறைச் செயலா்.
ஆனால், ஏறக்குறைய 11 மாதங்களாக இந்தப் புகாா் மீது எந்த விசாரணையும் நடக்கவில்லை.
இந்த வழக்கை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்.
கழிவுகள் அகற்ற கருவி: 1993-ஆம் ஆண்டு முதல் கழிவுகளை அகற்றும் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோா் 206 போ். இதில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு. இதில் திமுக ஆட்சிக் காலமும் உண்டு. அரசு மட்டுமல்ல அனைவரும் சோ்ந்து இச்சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மனிதா்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது என்பதே திராவிட இயக்கக் கொள்கை. இந்தப் பணிக்கென்று நவீனக் கருவிகள் உருவாக்கப்பட வேண்டும். மனித மாண்பு பேணப்பட, நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
கிரிக்கெட் சங்கத்திடம் வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளது என மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் சுட்டிக்காட்டியும், அந்தப் பணத்தை வசூல் செய்யாமல், ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக கூறப்படுகிறது. அமைச்சரவை அப்படி முடிவு எடுத்திருந்தால், அதற்கான அரசாணை ஏதும் வெளியிடாமல் நிறுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...