நெகிழி மாசில்லா தமிழ்நாடு- உறுதிமொழி ஏற்பைத் தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி

உலக சாதனை நிகழ்வாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும்
நெகிழி மாசில்லா தமிழ்நாடு- உறுதிமொழி ஏற்பைத் தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி

உலக சாதனை நிகழ்வாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் “நெகிழி மாசில்லா தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சி உறுதிமொழி ஏற்பை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை மற்றும் கிரீன் லைஃப் தொண்டு நிறுவனமும் இணைந்து உலக சாதனை நிகழ்வாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் “நெகிழி மாசில்லா தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சி உறுதிமொழி ஏற்று துவக்கி வைக்கப்பட்டது.

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட,  தமிழ்நாடு அரசால் ஜனவரி-1, 2019 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 

இந்த பிளாஸ்டிக் தடையை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் பத்து உறுப்பினர்களை கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

“பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட மாநில அளவிலான பிரச்சாரத்தினை துவக்கி வைக்கும் விதமாக, அதற்கான இலச்சினையை அறிமுகம் செய்து, www.plasticpollutionfreetn.org  என்ற வலைதளத்தையும், Plastic Pollution Free Tamil Nadu என்ற கைப்பேசி செயலியையும் (ஆப்) தமிழக முதல்வர் 23.8.2018 அன்று துவக்கி வைத்தார்கள். மேலும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் அதற்கான மாற்றுப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகன சேவையும் துவக்கி வைக்கப்பட்டது.

மேலும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்த பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 17.6.2019 அன்று விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, பள்ளிக்கல்வித் துறை மற்றும் கிரீன் லைஃப் தொண்டு நிறுவனமும் இணைந்து “நெகிழி மாசில்லா தமிழ்நாடு” என்ற இயக்கத்தை,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், குழந்தைகள் தினமான நவம்பர் 14-ஆம் நாளான இன்று, உலக சாதனை நிகழ்வாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் “நெகிழி மாசில்லா தமிழ்நாடு” உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெகிழி மாசில்லா தமிழ்நாடு - உறுதிமொழி
நெகிழி மாசில்லா தமிழ்நாடு!
நெகிழ்ச்சியான தமிழ்நாடு!
மகிழ்ச்சியான தமிழ்நாடு !
இன்றைய மாணவர்களாகிய நாங்கள் உயிரினங்களுக்கு கேடு விளைவிக்கும் நெகிழியை முற்றிலும் தவிர்த்து, நாளைய தமிழ்நாட்டை பசுமையாக்கக் கூடிய இந்த நெகிழி மாசில்லா தமிழ்நாடு இயக்கத்தில் சேர்ந்து, நம்மையும் நம்மை சுற்றியுள்ள அனைத்து இடங்களையும் தூய்மையாக வைப்பது மட்டுமின்றி, மனித உயிர்களுக்கு தீங்கு தரக்கூடிய இந்த நெகிழியை நம் அன்றாட வாழ்வில் இருந்து அகற்றுவதோடு, ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் நெகிழியை சரியான முறையில் அழித்து அதற்கு மாற்றாக இருக்கும் இயற்கையால் ஆன பொருட்களை பயன்படுத்தி மகிழ்ச்சியாகவும், நலமாகவும் வாழ்வோம் என்றும், தலைமுறை போற்றும் தொலைநோக்கு திட்டமாகிய நெகிழி மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றும் உளமாற உறுதி ஏற்கிறோம்.

நெகிழி மாசில்லா தமிழ்நாடு!
நெகிழ்ச்சியான தமிழ்நாடு!
மகிழ்ச்சியான தமிழ்நாடு !
நெகிழி மாசில்லா தமிழ்நாடு” உறுதிமொழி ஏற்கப்பட்ட பிறகு, தமிழக முதல்வர், குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், அமைச்சர் பெருமக்கள், கிரீன் லைஃப் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் விருகை வி.என். ரவி மற்றும்  கே. பழனி, தலைமைச் செயலாளர் க. சண்முகம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com