ஐஐடி மாணவி ஃபாத்திமா
ஐஐடி மாணவி ஃபாத்திமா

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்? ஃபாத்திமாவின் தந்தை லத்தீப் எழுப்பும் கேள்விகள்!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் என்பது போல ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் தந்தை, சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Published on


சென்னை: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் என்பது போல ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் தந்தை, சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தமிழக டிஜிபி திரிபாதியை சென்னையில் இன்று நேரில் சந்தித்து, ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் மரணம் குறித்து புகார் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அவரது தந்தை அப்துல் லத்தீப்.

அப்போது அவர் கூறியதாவது, சென்னை-ஐஐடியில் சேர்ந்து நான்கே மாதத்தில் எனது மகள் மரணம் அடைந்துள்ளார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கண்டுபிடிப்பதாக டிஜிபி உறுதி அளித்துள்ளார். அவரது உறுதியை ஏற்றுக் கொண்டு நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்.

அதே சமயம், எனது மகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தான் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

மதிப்பெண் விவகாரத்தில் ஃபாத்திமாவுக்கும் பேராசிரியர் சுதர்சனன் பத்மநாபனுக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. ஐஐடி பேராசிரியர் சுதர்சனன் பத்மநாபன் அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வதாக வீட்டில் ஃபாத்திமா கூறியுள்ளார்.

ஃபாத்திமாவின் செல்போனை பெற்றோர் முன்னிலையில் அன்லாக் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

எனது மகள் தொடர்பான சிசிடிவி காட்சிகளை என்னிடம் காட்ட மறுக்கிறார்கள். எனது மகள் தற்கொலை செய்து கொள்ள அந்த கயிறு எங்கிருந்து கிடைத்தது.

ஐஐடியில் இருந்து இதுவரை ஒருவர் கூட தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவிக்கவில்லை. தற்கொலை நடந்த அறை பூட்டி சீல் வைக்கப்படவில்லை.

எனது மகளுக்கு ஐஐடியில் மிகக் கடினமான நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. எனது மகளின் மரணத்தைப் பார்க்கும் போது தற்கொலை போல் தெரியவில்லை. விசாரணை நடத்தி அதிகாரிகள் உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு சென்னை க்ரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை, ஃபாத்திமாவின் தந்தை சந்திக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com