விழுப்புரம் மாவட்டத்திலேயே 4 ஊராட்சிகள் நீடிக்க வலியுறுத்தி கடையடைப்பு

திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள டி.கொளத்தூர், ஆமூர், பெரியசெவலை, சரவணம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்திலேயே நீடிக்க வலியுறுத்தி, அந்தக் கிராமங்களில் கடைகளை அடைத்து கருப்புக்கொடி ஏந்தி
விழுப்புரம் மாவட்டத்திலேயே 4 ஊராட்சிகள் நீடிக்க வலியுறுத்தி கடையடைப்பு


விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள டி.கொளத்தூர், ஆமூர், பெரியசெவலை, சரவணம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்திலேயே நீடிக்க வலியுறுத்தி, அந்தக் கிராமங்களில் கடைகளை அடைத்து கருப்புக்கொடி ஏந்தி மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விழுப்புரம் அருகேயுள்ள திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திலிருந்த டி.கொளத்தூர், பெரியசெவலை, ஆமூர், சரவணம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் சேர்க்கப்பட்டன. 

இந்த 4 ஊராட்சிகளையும் விழுப்புரம் மாவட்டத்தில் நீடிக்க வேண்டியும், 2 கி.மீ. தொலைவில், மிக அருகிலுள்ள திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில் இணைக்க வலியுறுத்தியும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அந்த 4 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் போராடி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சனிக்கிழமை கடையடைப்பு, கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியசெவலை கூட்டுச்சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் எத்திராஜ், அமமுக ஒன்றியச் செயலர் ஜெ.குமார், திமுக மாவட்டப் பிரதிநிதி சக்திவேல், பாமக ஒன்றியச் செயலர் கோபி, இளைஞர் பெருமன்ற ஒன்றியச் செயலர் ராதாகிருஷ்ணன், தேமுதிக கிளைச் செயலர் சரவணன் உள்ளிட்டோர் முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், "டி.கொளத்தூர், ஆமூர் உள்ளிட்ட 4 ஊராட்சிகளையும் விழுப்புரம் மாவட்டத்திலேயே நீடிக்க நடவடிக்கை எடுக்காவிடில், அடுத்ததாக குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும்' என்றனர்.  அவர்களை திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி உள்ளிட்ட போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com