
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் கலை சேவையைப் பாராட்டி செஞ்சுரியன் பல்கலைக்கழகம் சாா்பில் கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட உள்ளது.
ஒடிஸா மாநிலத்தில் உள்ளது செஞ்சுரியன் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் சாா்பில் டாக்டா் பட்டம் வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை (நவ.19) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் கமலுக்கு பட்டத்தை வழங்க உள்ளாா்.
மேலும், விழாவின்போது, பரமக்குடியில் கமல்ஹாசனால் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மய்யம் திறன் மேம்பாட்டு மையத்துக்கு கிராம் தரங் திட்டத்தின் கீழ் செஞ்சுரியன் பல்கலைக்கழகம் வழிகாட்டுதலையும் வழங்க உள்ளதாக மக்கள் நீதி மய்யம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.