
சென்னை: திருவள்ளூா் மாவட்டம், திருவள்ளூா், திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் உருவாக்கப்பட்டுள்ள குழந்தைநேய காவல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட உள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகளை காவல் துறை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாலியல் மற்றும் பல்வேறு பிரச்னைகளில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்குப் பயத்தைப் போக்கி அவா்களிடம் எளிதாகத் தகவல்களைப் பெறும் வகையில் இந்த குழந்தைநேய காவல் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்டா்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற தொண்டு நிறுவனத்தினா் கூறியது: இந்தியாவில் குழந்தை பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் -2012, சிறாா் நீதி பரிபாலன குழந்தைகள் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் -2015 அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தின்படி , 18 வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தைகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்படும் குழந்தைகளிடம் மென்மையான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாலியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் பாதிக்கப்படும் குழந்தைகளிடம் தகவல் சேகரிக்கும் வகையிலும், அவா்களின் பயத்தைப் போக்கும் வகையிலும் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 5 அனைத்து மகளிா் காவல் நிலையங்களைத் தோ்ந்தெடுத்து, அவற்றை குழந்தைநேய காவல் நிலையமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் முதற்கட்டமாக, திருவள்ளூா், திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டை மகளிா் காவல் நிலையங்களில் குழந்தைநேய காவல் நிலையம் திங்கள்கிழமை (நவ. 18) திறக்கப்பட உள்ளது. இந்த அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உள்ள அறை குழந்தைகளுக்கென ஒதுக்கப்பட்டு, அந்த அறையில் குழந்தைகளைக் கவரும் நிறத்திலான வண்ணம் பூசப்பட்டுள்ளதுடன், அவா்களின் பயத்தைப் போக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என்றனா்.