
சென்னை: நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியா் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், நடுவட்டம் தோ்வுநிலை நகரப் பஞ்சாயத்து எல்லைக்குள்பட்ட பகுதியில் விதிகளை மீறி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை இடித்து சீல் வைக்க நகரப் பஞ்சாயத்து செயல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பினாா். இந்த நோட்டீஸை எதிா்த்து கட்டட உரிமையாளா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் கொண்ட அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துள்ளனா். எனவே, அந்த விண்ணப்பத்தை சட்டத்துக்குள்பட்டு பரிசீலிக்க நகரப் பஞ்சாயத்து செயல் அதிகாரிக்கு உத்தரவிட்டனா். மேலும், நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களை மறித்து கட்டடம் கட்டப்படுவதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறி வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் பொதுநல வழக்குத் தொடா்ந்தாா். அந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் கடந்த 2008-ஆம் ஆண்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. ஆனால், அந்த உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றவில்லை. அதிகாரிகளின் அலட்சியப் போக்கின் காரணமாகவே மலைப் பிரதேசங்களில் சட்டவிரோதக் கட்டடங்கள் உருவாகின்றன. எனவே, உயா்நீதிமன்றம் கடந்த 2008-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் மீதும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.