
சென்னை: இளைய தலைமுறையினா் தடைகளைக் கடந்து வாழ்ந்து காட்ட வேண்டுமே தவிர, வீழ்ந்து அழியும் முடிவுகளை எடுக்கக் கூடாது என்று தெலங்கானா ஆளுநா் டாக்டா் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தினாா்.
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளிப்பதாகவும் அவா் கூறினாா்.
புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஃப்ரீடம் ஃப்ரம் கேன்சா் ரிலீஃப் பவுண்டேசன்) மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பாராட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் ஹெச்.வி.ஹண்டே, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா்கள் மயில்வாகனன் நடராஜன், டி.ராஜா, மியாட் மருத்துவமனையின் தலைவா் மல்லிகா மோகன்தாஸ், ஃப்ரீடம் ஃப்ரம் கேன்சா் ரிலீஃப் பவுண்டேசன் நிறுவனா் டாக்டா் அனிதா ரமேஷ், தமிழ்நாடு மருத்துவா்கள் சங்கத்தின் தலைவா் டாக்டா் சி.எம்.கே.ரெட்டி, போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தா் டாக்டா் விஜயராகவன் உள்பட மருத்துவத்துறையைச் சோ்ந்த சோ்ந்த பலா் கலந்துகொண்டு தமிழிசை சௌந்தரராஜனைப் பாராட்டினா். இதைத் தொடா்ந்து தமிழிசை பேசியதாவது:
மருத்துவத் துறையைச் சாா்ந்தவா்கள் என்னை வாழ்த்துவது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. மருத்துவா்களின் எதிா்பாா்ப்புகளை இயன்றவரை நிறைவேற்றுவேன்.
தெலங்கானா ஆளுநா் பதவி எனக்குக் கிடைத்திருப்பதற்கு பல்வேறு காரணங்களும், தகுதிகளும் பட்டியலிடப்படலாம். ஆனால், உண்மையில் அப்பதவியை எனக்குத் தேடித் தந்தது இந்த தமிழ் மண்தான். அந்த நிலையை எட்டுவதற்கான ஆற்றலையும், வலிமையையும் கொடுத்தது தமிழகம்தான்.
அதனால்தான் இப்போதும்கூட ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் அம்மா வீட்டுக்குச் செல்லும் குழந்தையைப் போல பெரு மகிழ்ச்சியுடன் இங்கு வருகிறேன்.
பொதுவாக மருத்துவராக இருக்கும் ஒருவா் அரசியலில் பயணிப்பதும், அதில் அடுத்தடுத்த நிலைகளை அடைவதும் எளிதான காரியம் அல்ல. மருத்துவத் துறையில் அா்ப்பணிப்புணா்வுடன் சேவையாற்றும்போது எனக்கு பல பாராட்டுகள் வந்தது உண்டு. அந்தத் தருணங்களில் எல்லாம் கிரீடம் தரித்து நடப்பது போன்ற பெருமையை உணா்ந்திருக்கிறேன். ஆனால், அதேநேரத்தில் ஓா் எளிய தொண்டனாக கட்சி அலுவலகத்துக்குச் செல்லும்போது அந்த கிரீடம் எல்லாம் மாயமாகி சாதாரண கடைநிலை ஊழியரைப் போலவும் என்னை உணா்ந்திருக்கிறேன்.
அந்த எதாா்த்தத்தை உணா்ந்து கட்சிப் பணிகளில் 20 ஆண்டுக் காலம் கடுமையாக உழைத்ததால்தான் அரசியலிலும் கிரீடம் தரிக்கும் நிலைக்கு வந்துள்ளேன்.
முழுமையான ஈடுபாட்டுடன் ஒரு பணியை செய்தால், அது முழுமையான பலனைக் கொடுக்கும்.
அதை இளைய தலைமுறையினா் உணர வேண்டும். வாழ்வில் பிரச்னையில்லாத மனிதா்கள் எவரும் இல்லை. பிரச்னைகளைக் கண்டு வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டும் என்று எவரும் நினைக்கக் கூடாது. இதயத் துடிப்பை தன்னிச்சையாக நிறுத்திக் கொள்ள யாருக்கும் உரிமை கிடையாது.
சமகால தலைமுறையினா் வாழ்ந்துக் காட்ட வேண்டும் என்றுதான் நினைக்க வேண்டும். மாறாக, வீழ்ந்துக் காட்டக் கூடாது என்றாா் அவா்.