நேற்று அதிசயம் நடந்தது; நாளையும் நடக்கும்: அரசியல் குறித்து ரஜினி

நேற்று அதிசயம் நடந்தது; இன்றும் அதிசயம் நடக்கிறது; நாளையும் அதிசயம் நடக்கும் என்று தமிழக அரசியல் நிலவரம் குறித்து சூசகமாக தெரிவித்தார் ரஜினிகாந்த். 
நேற்று அதிசயம் நடந்தது; நாளையும் நடக்கும்: அரசியல் குறித்து ரஜினி

சென்னை: நேற்று அதிசயம் நடந்தது; இன்றும் அதிசயம் நடக்கிறது; நாளையும் அதிசயம் நடக்கும் என்று தமிழக அரசியல் நிலவரம் குறித்து சூசகமாக தெரிவித்தார் ரஜினிகாந்த்.

நடிகர் கமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக, "உங்கள் நான்' என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இசையமைப்பாளர் இளையராஜா நடத்திய இந்த நிகழ்ச்சியில் கமலின் முக்கிய திரைப்பாடல்கள் இடம் பெற்றன. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, சரத்குமார், வடிவேலு, விஜய் சேதுபதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 கோடி நிதி: இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்கப்பட்டது. இதற்கான நிதியை ரஜினியும், கமலும் இணைந்து வழங்கினர்.

இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், "சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்ற பேச்சு சமீப காலமாக அதிகரித்துள்ளது. எல்லோரும் அரசியலுக்கு வருவதைப் போல் திரைத்துறையினரும் வர வேண்டும். கமல் அரசியலில் விஸ்வரூபம் எடுப்பார். அது போல் ரஜினியும் வருவார்.

அதே நேரத்தில் இருவரும் அரசியலில் சாதிப்பதும் உறுதி. ஆனால், அப்படி சாதிப்பது என்றால் இருவரும் தனித்தனியே அரசியலுக்கு வருவதை விட, இருவரும் ஒன்றாக சேர்ந்து அரசியல் செய்தால், கண்டிப்பாக தமிழகத்தில் நல்ல ஆட்சியை தருவார்கள். அவர்களுக்குப் பிறகு அரசியலில் அவர்களது தம்பிகளுக்கும் இடம் விட வேண்டும்' என்றார்.

என் வளர்ச்சியில் முக்கியமானவர்கள்: நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், "இந்த 60 வருட திரைப் பயணத்தில் முக்கியமானவர்கள் பலர். அதில் கே.பாலச்சந்தர், ரஜினிகாந்த், கருணாநிதி, எம்.ஜி.ஆர், சந்தானபாரதி, ஷங்கர், சுஜாதா, அனந்து, ஜெமினி, கிரேசி மோகன், நாகேஷ், வி.கே.ராமசாமி, ஸ்ருதி, அக்ஷரா, அம்மா, அப்பா, தமிழர்கள் என இப்படி பலர். இவர்கள் எல்லோரும் என் வளர்ச்சியில் முக்கியமானவர்கள் என்றார் கமல்.

ரஜினிகாந்த்: என் அருமை நண்பரும் கலையுலக அண்ணனுமான கமலுக்கு எனது வாழ்த்துகள். இந்த உலகத்திலேயே நடிப்பு, எழுத்து, பாடல்கள் எழுதுவது, பாடுவது, 10 கதாபாத்திரங்களில் ஒரே படத்தில் நடிப்பது, 60 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகத்தில் ஒரு சாம்ராஜ்ஜியத்தையே நடத்துவது என எல்லாவற்றையும் செய்து காட்டிய ஒரே நபர் கமல்தான். அதனால்தான் அவர் உலக நாயகன்.

கமல் ஒரு மிகப்பெரிய ஜீனியஸ். அவர் என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என நினைக்கிறாரோ, அதையெல்லாம் மக்களுக்கு தன் சினிமாக்களின் மூலம் கற்றுக் கொடுக்கிறார்.

அவர் பேசுவது புரியவில்லை என பலர் சொல்லுகிறார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.

கமலுக்கும், எனக்குமான நட்பு உயிரோட்டமானது. அதை யாராலும் உடைக்க முடியாது. நாங்கள் இருவருமே எங்களின் வளர்ச்சிக்காக எங்களின் ரசிகர்களைப் பயன்படுத்திக் கொண்டதில்லை.

எங்கள் இருவருக்கும் வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் அரசியலுக்கு வந்தால், எங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள மாட்டோம்.

மேடையில் நிறைய பேர் அரசியல் சார்ந்து பேசினார்கள். தமிழ்நாட்டின் முதல்வர் ஆவேன் என்று எடப்பாடி கே. பழனிசாமி, இரு ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

அவர் முதலமைச்சர் பதவிக்கு வந்ததும், இன்னும் இருபது நாள்களுக்கு கூட அந்த பதவியில் அவர் இருக்க மாட்டார் என்றும் சொன்னார்கள்.

அவர் அந்த பதவிக்கு வந்தது அதிசயம். நேற்று அதிசயம் நடந்தது, இன்றும் அதிசயம் நடக்கிறது, நாளையும் அதிசயம் நடக்கும் என்றார் ரஜினிகாந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com