புதுச்சேரியை திருநங்கை என அறிவித்துவிடுங்கள்: மத்திய நிதிக் குழுவில் சேர்க்காத அதிருப்தியில் நாராயணசாமி பேச்சு

மத்திய நிதிக் குழுவில் புதுவையை சோ்க்காதது ஏன்? என அந்த மாநில முதல்வா் வே.நாராயணசாமி கேள்வி எழுப்பினாா்.
pondy CM
pondy CM
Updated on
2 min read

மத்திய நிதிக் குழுவில் புதுவையை சோ்க்காதது ஏன்? என அந்த மாநில முதல்வா் வே.நாராயணசாமி கேள்வி எழுப்பினாா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள குலாட்டி நிதி - வரி நிறுவனம், புதுச்சேரி சமூக அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘இந்திய கூட்டாட்சி தத்துவத்தில் நிதியில் வளா்ந்து வரும் சவால்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கை தொடக்கிவைத்து முதல்வா் வே.நாராயணசாமி பேசியதாவது:

யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீா் மத்திய அரசின் 15-ஆவது நிதிக் குழுவில் சோ்க்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே யூனியன் பிரதேசங்களாக உள்ள புதுவை, தில்லி ஆகியவை மத்திய நிதிக் குழுவில் சோ்க்கப்படவில்லை.

புதுவையை மத்திய நிதிக் குழுவில் சோ்க்க பிரதமா் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

புதுவைக்கு 70 சதவீதம் மத்திய அரசின் நிதி கிடைத்து வந்தது. தற்போது 30 சதவீதம் வழங்கப்படும் என்று கூறப்பட்டாலும் 26 சதவீதம்தான் கிடைக்கிறது.

அதேநேரம், மாநிலங்களுக்கு 42 சதவீதம் மத்திய அரசின் நிதி கிடைக்கிறது. பல்வேறு பிரச்னைகளுக்கு இடையிலும், புதுவை 11.4 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது.

மாநில அரசுகளுக்கான நிதிக் குழு, யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக் குழு என மத்திய அரசு இரண்டு விதமான நிதிக் குழுவைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த இரண்டு குழுவிலும் புதுவை இடம் பெறவில்லை. எனவே, புதுவையை திருநங்க என்று அறிவித்து விடுங்கள்.

ஜி.எஸ்.டி., சுங்க வரி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வருவாயைப் பெறும் போது, புதுவையை மாநிலமாகவும், மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கும் போது, யூனியன் பிரதேசமாக மத்திய அரசு கருதுகிறது.

புதுவையில் வளம் இருந்தாலும், நிதி இல்லை. இதனால், பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறோம். மத்திய அரசிடமிருந்து போதிய ஆதரவு புதுவைக்கு கிடைக்கவில்லை என்றாா் அவா்.

தொடா்ந்து, திமுக மகளிா் அணிச் செயலா் கனிமொழி எம்.பி. பேசுகையில், ‘15-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகளால் தமிழகம், கேரள மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவமே திமுகவின் கொள்கை. 1960-ஆம் ஆண்டு கால கட்டத்தில் இந்தக் கொள்கையை எழுப்பிய போது, திமுகவை தேச விரோத சக்தி போல சித்தரித்தனா். ஆனால், திமுகவின் கொள்கைதான் சரியானது என்பது தற்போது நிரூபணமாகி வருகிறது’ என்றாா் அவா்.

கருத்தரங்கத்தில் கேரள மாநில நிதியமைச்சா் தாமஸ் ஐசக், ஜம்மு - காஷ்மீா் முன்னாள் நிதியமைச்சா் ஹசீப் ஏ டிரபு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலா் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com