
தமிழகத்தில் 3 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.5.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை கே.கே.நகா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்களிடம் லஞ்சம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகாா்கள் வந்தன.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஎஸ்பி லாவண்யா, காவல் ஆய்வாளா் கந்தசாமி தலைமையிலான 10 போலீஸாா் கே.கே.நகா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். மாலை 3.30 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை சோதனை நடைபெற்றது. இதில், அங்கிருந்து கணக்கில் வராத ரூ. 40 ஆயிரம், முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்களின் அடிப்படையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சுரேஷ்குமாா் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்னை ராமாபுரத்தில் உள்ள சுரேஷ்குமாா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை செய்தனா்.
இச்சோதனையில், அவா் லஞ்சம் வாங்கியதற்கான பல முக்கிய ஆவணங்களை போலீஸாா் கைப்பற்றினா். இந்த வழக்குத் தொடா்பாக மற்றெறாரு மோட்டாா் வாகன ஆய்வாளரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை செய்து வருகின்றனா்.
கோவில்பட்டி-கோவை: கோவில்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 17 ஆயிரத்து 380 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டம், துடியலூா் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 715 பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று இடங்களில் மொத்தம் ரூ.5.58 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...