
தாமிரவருணி நதிக்கரையில் நிகழாண்டில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார், தமிழக தொல்லியல் துறை ஆணையர் த. உதயசந்திரன்.
தூத்துக்குடியில் சனிக்கிழமை தொடங்கிய புத்தகத் திருவிழாவில் அவர் மேலும் பேசியது: கீழடி ஆய்வு மூலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்ச் சமூகம் கல்வியறிவு, எழுத்தறிவு பெற்ற சமூகமாக இருந்திருக்கிறது என்ற சான்று அமெரிக்காவிலிருந்து நமக்குக் கிடைத்துள்ளது.
கீழடி நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது ஆகும். ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் 2,900 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அனைவரும் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும். ஆதிச்சநல்லூரில் நிகழாண்டில் மிகப்பெரிய கள ஆய்வை மேற்கொள்ளவுள்ளோம். இதற்காக மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம்.
தாமிரவருணிக் கரைகளில் உள்ள நாகரிக எச்சங்களைக் கண்டறியும் வகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அறிவியல்பூர்வமாக தமிழர்களின் தொன்மையை நிரூபிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம். தாமிரவருணிக் கரையில் மேற்கொள்ளப்படும் ஆய்வு முக்கியமாக பெரும் பங்கை வகிக்கும். தூத்துக்குடி மாவட்டம் சிவகளையிலும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது என்றார் அவர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...