உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும்

தமிழகம், புதுவையில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வோம் என
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும்

தமிழகம், புதுவையில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வோம் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
 இதுகுறித்து திருச்சியில் அவர் சனிக்கிழமை கூறியது: கும்பல் படுகொலை தொடர்பாக கருத்துத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு கோரிக்கை கடிதம் எழுதிய திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிந்திருப்பது உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அவமானத்தைத் தேடித் தந்துள்ளது.
 ஜனநாயக விழுமியங்களைக் காக்கும் நாடான இந்தியாவில் இத்தகைய கொடுமை அரங்கேறியிருப்பது கவலைக்குரியது. சுதந்திரத்துக்கு முன்பிருந்த அடக்குமுறைகள் மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. நாடு மீண்டும் சர்வாதிகாரப் போக்கில் வேகமாக நடைபோடுகிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. உடனடியாக இந்த வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி முழு விசாரணை நடத்த வேண்டும். நீட் தேர்வு என்பது பயிற்சி மையங்களுக்கும், ஆள் மாறாட்டத்தில் ஈடுபடுவோருக்கே பெரிதும் பயனளிக்கிறது என்பது தெளிவாகிவிட்டது. கடும் கெடுபிடிகளுக்கு இடையே நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்திருப்பது பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திடுகிறது.
 தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்வி சேர்க்கை நடைபெறாது என தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். பள்ளிக் கல்வியிலும் சிறிய வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்பது கல்வியை சீர்குலைக்கும் செயல். இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும். இதேபோல, உயர்கல்வியில் பகவத் கீதையை விருப்பப் பாடமாக அறிவித்திருப்பது மதச்சார்பற்ற நாட்டுக்கு அழகல்ல. நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவுள்ளோம். தமிழகம் மற்றும் தமிழர்களின் நலனுக்கு எதிரான பாஜகவின் திட்டங்களுக்கு அதிமுக அரசு தொடர்ந்து ஆதரவாகச் செயல்படுவதால் இடைத்தேர்தலில் அக்கட்சி படுதோல்வியைச் சந்திக்கும்.
 திமுக கூட்டணியே மகத்தான வெற்றி பெறும். உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com