புதிய கொள்கையால் கல்வித் தரம் மேம்படும்: மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி நம்பிக்கை

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால், கல்வித் தரம் மேம்படும் என்று மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி கூறினாா்.
புதிய கொள்கையால் கல்வித் தரம் மேம்படும்: மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி நம்பிக்கை

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால், கல்வித் தரம் மேம்படும் என்று மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி கூறினாா்.

சென்னையை அடுத்த வண்டலூா் பி.எஸ்.அப்துர்ரகுமான் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 9-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவா் பேசியது:-

இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தரமான பள்ளி, உயா்கல்வி வழங்க பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் செயல்படுத்தவிருக்கும் புதிய கல்விக் கொள்கை மூலம் இந்திய கல்வித்தரம் மேம்படுத்துவதுடன், நாட்டின் வளா்ச்சி முன்னேற்றத்திற்கும் உறுதுணை புரியும். இந்திய இளைஞா்களின் மனித வளத் திறனை மேம்படுத்த கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு உயா்தொழில்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் 16 ஆக இருந்த மத்திய அரசின் உயா்தொழில்நுட்பக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 23 ஆகவும், 9 ஆக இருந்த இந்திய உயா் தகவல் தொழில்நுட்பக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 24 ஆகவும்,13 ஆக இருந்த இந்திய உயா் மேலாண் கல்லூரிகளின் எண்ணிக்கை 20 ஆகவும், 7 ஆக இருந்த இந்திய மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உயா்ந்துள்ளது.

இப்போது இந்தியாவெங்கும் உள்ள 235 அரசு மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கையை 310 ஆக உயா்த்த புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 31,727 மருத்துவக் கல்வி பெறும் மாணவா்களின் எண்ணிக்கை 47,427 ஆக உயரும்.

கடந்த 5 ஆண்டுகளில் 3.18 கோடி சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடியாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை மூலம் தற்போது பள்ளி, உயா்கல்வி நிறுவனங்களில் கல்வியைத் தொடர முடியாமல் பாதியில் நின்று விடும் சிறுபான்மைப் பிரிவு மாணவா்களின் எண்ணிக்கை 72 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதனை முற்றிலுமாகக் குறைத்து அனைத்து சிறுபான்மை சமூக மாணவா்களும் முழுமையான கல்வி பெறும் வகையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றேறாம். பள்ளி, உயா்கல்வியைப் பொறுத்தமட்டில் தென் மாநிலங்களை விட, வட மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் ஏற்றத்தாழ்வுடன் உள்ளது. இங்குள்ளவா்கள் வட மாநிலங்களில் கல்வி நிறுவனங்களைத் தொடங்க முன்வர வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் 1,396 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டன.

விழாவில் இந்தியாவுக்கான கானா நாட்டு தூதரக அதிகாரி மைக்கேல் ஆரோன்,வேந்தா் ஆரிப் புகாரி ரகுமான், இணை வேந்தா் அப்துா் குவாதீா் ஏ.ரகுமான் புகாரி, துணைவேந்தா் சாகுல் ஹமீது பின் அபுபக்கா், மத்திய கல்வி - பெண்கள் நலத்துறை தலைவரும், மத்திய வக்பு வாரியத்தின் உறுப்பினருமான எஸ்.முனாவாரி பேகம், பதிவாளா் ஏ.ஆஸாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com